Saturday, August 23, 2014

அன்றைய சென்னை: சென்னை மத்திய சிறை



இந்தியாவின் பழமையான சிறைகளில் ஒன்று சென்னை மத்திய சிறை. 172 ஆண்டுகளுக்கு முன்பு, 1837-ம் ஆண்டு 9 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 2,500 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்டதாக இந்த சிறை இருந்தது. தொடக்கத்தில் மதறாஸ் சிறை என்றழைக்கப்பட்ட இந்த சிறை, 1855-ல்தான் மத்திய சிறை என்று மாற்றப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுபாஷ் சந்திரபோஸ் முதல் வீர சாவர்க்கர் வரை இந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் சிறையிலேயே உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. இந்த சிறையில் இருந்தபோது, தனக்கு விலை உயர்ந்த தேநீர் வழங்க வேண்டும் என்று கேட்பாராம் சுபாஷ் சந்திரபோஸ்.

ஆடம்பரத்துக்காக இல்லை; ஆங்கிலேயர்களுக்குச் செலவு வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிச் செய்வாராம். இங்கு சிறைவைக்கப்பட்ட அறிஞர் அண்ணா பிற்காலத்தில் சொன்னார், “சிறைச்சாலை ஒரு சிந்தனைக் கூடம்!”

மிகவும் பழமையாகிவிட்டதாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாலும் இந்த சிறையை இடித்துவிட அரசு முடிவுசெய்தது. அதன்படி, 2006-ம் ஆண்டு மத்திய சிறைச்சாலை மூடப்பட்டது.

சென்னையை அடுத்துள்ள புழலில், 220 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மத்திய சிறைக்குக் கைதிகள் மாற்றப்பட்டனர்.

2009-ல் அதை இடிக்கும் பணி தொடங்கியது. முற்றிலுமாக இடிக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு, செயல்படத் தொடங்கியது.

இனிமேல் பழைய மத்திய சிறையைத் திரைப்படங்களில்தான் பார்க்க முடியும்.

இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014

No comments:

Post a Comment