Monday, August 25, 2014

கொஞ்சம் சினிமா ...கொஞ்சம் பாப்கார்ன் : தமிழ் சினிமாவுக்கு 'அஞ்சான்' கற்று தரும் பாடம் என்ன?



'தமிழ் சினிமா படைக்கும் நல்லுலகம் இதுவரை மொக்கைப் படத்தையே ரசிகர்களுக்குத் தந்தது இல்லையோ?!' என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'அஞ்சான்' படமும், அதற்கு சமூக வலைதளத்தில் குவிந்த 'கழுவி ஊற்றல்' எதிர்வினைகளும்!

இப்படிப்பட்ட கலாய்ப்பு விமர்சனங்களை எள்ளளவும் எதிர்பார்த்திடாத நடிகர் சூர்யா, இணையத்தில் தனது படம் மீதான தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சியுற்று, "தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பே, சீட்டில் இருந்தபடி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள்" என்று ஆதங்கத்தைக் கொட்டினார்.

சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டால், குறிப்பிட்ட அப்படம் வசூல் ரீதியிலும் வெற்றி அடைய வேண்டும்தானே? ஆனால், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' முதலான படங்கள் வர்த்தக வெற்றியை எட்டாதது இங்கே கேள்வியை எழுப்புகிறது.

சரி, ட்விட்டர் - ஃபேஸ்புக்கில் ரசிகர்களால் பதியப்படும் கருத்துகளும் விமர்சனங்களும் ஒரு படத்தின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இதுபற்றி, தமிழ் சினிமாவின் வர்த்தக விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் கோடம்பாக்க பிரமுகர் ஒருவரிடம் பேசினேன்.

"சிறிய பட்ஜெட் படங்களுக்கு எப்படியோ... ஸ்டார் வேல்யூ உள்ள பிரம்மாண்ட படங்களுக்கு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். படம் நன்றாக இல்லை என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இருக்கும் ரசிகர்களின் செயல்தான் தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை சீரழிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

காரணம், ஒரு பிரபல நடிகரின் படம் சுமாராக இருந்தால்கூட, தனக்குப் பிடித்த நடிகரின் போட்டியாளர் என்று அவரைக் கருதி, அந்த நடிகரின் படத்தை நையாண்டி, நக்கல், பகடி என்ற பெயரில் சீரழிப்பு வேலைகள் நடக்கின்றன. 'படம் செம மொக்கை... யாரும் போகாதீங்க' என்று முன்னெச்சரிக்கை வேறு. தனக்கு விருப்பமற்ற ஒரு நடிகரின் படம் வெற்றியடைவதை ஒரு ரசிகரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை எந்த வகையான உளவியலில் சேர்ப்பது என்பது தெரியவில்லை.

அஞ்சான் படத்துக்கு எதிராக எந்த ரசிகர் மோசமான பதிவிட்டு இருந்தாலும், அது சூர்யாவுக்குப் போட்டி நடிகராகக் கருதப்படுபவர்களுடைய ரசிகர்களின் வேலை என்று நினைத்து, அவர்களது படங்கள் வரும்போது சூர்யாவின் தீவிர ரசிகர்கள் களத்தில் இறங்குவதும் நடக்கலாம். இப்படியே மாறி மாறி செய்துகொண்டிருப்பதால், நிச்சயம் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு பாதக நிலை நீடிப்பது உறுதி" என்றார் அந்த முக்கியப் புள்ளி.

ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் வெகுவாக பிரபலம் அடைவதற்கு முன்பு, ஆன்லைனில் ப்ளாக்ஸ் எனப்படும் வலைப்பதிவுகளில் வெளிவரும் சினிமா விமர்சனங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த விமர்சனங்களுக்குக் கிடைத்த வரவேற்பை உணர்ந்த சினிமா துறையினர், வலைப்பதிவாளர்களுக்கே தனியாக ப்ரிவியூ ஷோ நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களின் முக்கியத்துவம் உணர்ந்த இளம் சினிமா படைப்பாளிகள் சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினர். அதன் மூலம், தங்கள் படைப்புகளுக்கு வலுவான விளம்பரம் கிடைக்கவும் வழிவகுத்தனர். இதற்கு, 'கற்றது தமிழ்' ராம் தனது 'தங்கமீன்கள்' படத்தை ஆன்லைனில் பிரபலப்படுத்திய அணுகுமுறையைக் குறிப்பிடலாம்.

ஆனால், இணையவாசிகளின் பலத்தை உணர்ந்து, தங்கள் படங்களின் டைட்டில் கார்டில் ஃபேஸ்புக், ட்விட்டர் நண்பர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, அவர்களை உச்சிக் குளிர வைத்ததில் முன்னோடி என்னவோ மலையாள சினிமா துறைதான்.

சரி, நம் விஷயத்துக்கு வருவோம். அஞ்சானுக்கு கிடைத்த ஆன்லைன் வரவேற்பால், முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் தங்களது படங்களின் புரோமோஷன்கள் குறித்தும், சமூக வலைதளங்களை அணுகுவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறிந்தேன்.
இதனிடையே, "ரசிகர்களிடம் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுவதும் தவறான அணுகுமுறை என்பது அஞ்சான் விஷயத்தில் உறுதியாகிவிட்டது. 'பாபா'வுக்கு அது நேர்ந்தபோது ஃபேஸ்புக் இல்லாதது யாரோ செய்த நற்ச்செயல். அஞ்சானுக்காக 20 லட்சம் யூடியூப் ஹிட்ஸ் கிடைத்தவுடன் சக்சஸ் மீட் வைத்தவர்கள், படம் சரியில்லை என்று கலாய்த்தால் ஏற்றுதானே ஆகவேண்டும்?" என்று என்னிடமே கேட்டார் ஒரு சினிமா ஆர்வலர்.
அதேவேளையில், சமூக வலைதளத்தை மிகவும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கின்றனர், இளம் இயக்குநர்கள்.

ஆன்லைனில் நீண்ட காலமாகவே இயங்கிவரும் இயக்குநர் வசந்தபாலனிடம் கேட்டபோது, "முன்பெல்லாம் பத்திரிகை விமர்சனம்தான் மக்களின் விமர்சனம் என்ற காலம் இருந்தது. அது தற்போது மாறிவிட்டது. 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறார்கள், அவர்களது விமர்சனத்தை உடனே பதிவு செய்கிறார்கள். அதில் தவறில்லை. ஒரு சின்ன படம் கூட நன்றாக இருக்கிறது என தொடர்ச்சியாக விமர்சனங்கள் வரும்போது அந்தப் படத்தின் வசூல் கூடுகிறது. நமக்கு சாதகமாக இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, படம் சரிவர ஓடவில்லை என்றால், ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் இயங்குபவர்களை குறைசொல்வது சரியல்ல. கொலவெறி என்ற பாடல் ஹிட்டானதற்கு ட்விட்டர், ஃபேஸ்புக் தானே காரணம்" என்றார்.

இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் பேசியபோது, "நான் சோஷியல் மீடியா ரியாக்‌ஷன்களை பாசிட்டிவ்வாதான் பார்க்கிறேன். பெரிய அளவில் விளம்பரங்கள் பண்ண முடியாமல், மக்களின் விமர்சனங்கள் மீதான நம்பிக்கை வைத்தே சில படங்கள் வெளியாகின்றன. ஏன்... 'பீட்சா', 'ஜிகர்தண்டா' படத்துக்குக் கூட ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்கள் மூலமாகதான் காட்சிகள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. அவ்வாறு விமர்சனங்கள் வெளியிடுவதில் எனக்கு தெரிந்து தவறு எதுவும் இல்லை. கலெக்‌ஷன் கூடும்போது கொண்டாடாமல், குறையும்போது மட்டும் திட்டினால் எப்படி?" என்றார் அவர்.

எனினும், "சிட்டி ஏரியால தான்பா இந்த பாதிப்பெல்லாம். அவுட்டர்ல எந்த பாதிப்பும் கிடையாது. ஃபேஸ்புக் மாஸ் ஹீரோ படங்களை என்னதான் கும்மாங்குத்து குத்தினாலும் சிட்டியை தவிர்த்த ஏரியாக்களில் பெரிய பாதிப்பு இல்லை" என்றும் தயாரிப்பு பிரிவு தரப்பைச் சேர்ந்த ஒருவர் தனது அப்சர்வேஷனைச் சொன்னதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும்.

தி இந்து:திங்கள், ஆகஸ்ட் 25, 2014

No comments:

Post a Comment