மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-க்கு தொடர்ந்து மீன் சப்ளை செய்து வந்த குடும்பம் இன்றும் சைதாப்பேட்டை மீன் சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

அரசியல்வாதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடபுடல் விருந்து நடக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். விஷயத்தில் விருந்து என்பதில் ஒரு தனித்தன்மை காணப்படும்.

அவருடன் எந்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பும் விருந்து கொடுப்பது அவர் பழக்கம். குறிப்பாக கேரளா பாணியில் சமைக்கப்பட்ட விரால் மீன் குழம்பு மற்றும் வஞ்சிரம் கருவாடு நிச்சயம் உண்டு.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கருத்தியலாளர் ஆண்டன் பாலசிங்கம் தனது நினைவுக் குறிப்பில் எம்.ஜி.ஆரை இவரும் எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரனும் சந்தித்ததை குறிப்பிட்டுள்ளார். அதில் மீன் இறைச்சியுடன் கூடிய எம்.ஜி.ஆர். வீட்டு சாப்பாட்டை நினைவு கூர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர். வீட்டு மீன் சமையலுக்கு தொடர்ந்து மீன்கள் அளித்து வந்த வியாபாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இன்றும் சைதாப்பேட்டை மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

என்.கே.சேகர் என்ற இந்த நபரின் கடையின் மிகப்பெரிய கவர்ச்சி அங்கு மாட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். படம் என்கிறார் வாடிக்கையாளர் ஒருவர். இந்தப் புகைப்படத்தில் சேகரின் தந்தையார், கண்ணன் என்ற மீனவர் மற்றும் தாயார் ஆகியோர் எம்.ஜி.ஆருடன் இருக்கின்றனர்.

"என்னுடைய தந்தையை எம்.ஜி.ஆர்-க்கு மிகவும் பிடிக்கும். 1977 சட்டப்பேரவைத் தேர்தல்களில் என் தந்தையை சைதாப்பேட்டை தொகுதிக்கு நிறுத்தினார். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தாலும் என் தந்தை 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினார்” என்று கூறும் சேகர், இப்போது மீன் கடையை சகோதரி தனமுடன் சேர்ந்து நடத்தி வருகிறார்.

“நாங்கள் எம்.ஜி.ஆர்-க்கு 1967ஆம் ஆண்டு முதல் மீன்கள் சப்ளை செய்து வந்தோம். நான் விரால் மீன் எடுத்துச் சென்று அவருக்காக அதனை சுத்தம் செய்து கொடுப்பேன். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அவர் இறைச்சி உணவு எடுத்துக் கொள்ள மாட்டார்” என்று கூறிய சேகர் எம்.ஜி.ஆரை ‘பெரியப்பா’ என்றுதான் அழைப்பாராம்.

முதல் நாள் சமைத்த மீன் குழம்பை மறுநாள் காலை உணவில் எடுத்துக்கொள்வதுதான் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கும் என்று சேகரின் சகோதரி தனம் நினைவு கூர்ந்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக வீட்டைத் தன் தந்தை அடமானம் வைத்திருந்தபோது எம்.ஜி.ஆர் மீட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல் சகோதரி பாக்கியலட்சுமியின் திருமண செலவுகளை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார்.

“சகோதரி தனம் இருதய நோயால் அவதிப்பட்டபோது அமெரிக்காவில் மருத்துவம் செய்து விடலாம் என்று எம்.ஜி.ஆர் உறுதியளித்தார். ஆனால் 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தார். அதாவது எங்கள் தந்தை இறந்து 11 நாட்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். மறைந்தார்” என்று சேகர் நினைவு கூர்ந்தார்.

எம்.ஜி.ஆர்-உடன் ஒவ்வொரு பொங்கலின் போதும் சந்திப்பு மேற்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை நினைவு கூர்ந்த சேகர், 'இன்றும் நல்லபடியாக மீன் விற்பனை செய்து வாழ்ந்து வருகிறோம், ஆனால் எம்.ஜி.ஆர். நினைவுகளை மறக்கமுடியாது” என்று கூறினார்
.தி இந்து:திங்கள், ஆகஸ்ட் 18, 2014