சென்னையின் 375-வது பிறந்த நாளையொட்டி அஞ்சல் உறை வெள்ளிக்கிழமை வெளியிடப் பட்டது.
கலாசாரப் பெருமையும் பாரம்பரியமும் கொண்ட சென்னை மாநகரின் 375-வது தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னையில் பயன்பாட்டில் இருந்த பழமையான போக்குவரத்துகளை நினைவுப்படுத்தும் வகையில் ட்ராம், படகு உள்ளிட்டவை களின் படங்களை கொண்ட அஞ்சல் உறை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு வட்டத்தின் தலைமை தபால் அலுவலர் எஸ்.சி.பிரம்மா வெளியிட இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத் தின் தொல்லியல் மேற்பார்வை யாளர் ஜி.மகேஸ்வரி பெற்றுக் கொண்டார்.
இந்த தபால் உறையில் உள்ள புகைப்படங்களை டி.ஹேமச்சந்திர ராவ் (72) என்ற பொறியாளர் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆர்வலர் சேகரித்துள்ளார். இந்த உறையின் அட்டையில் பங்கிங்ஹாம் கால்வாய் 1806-ம் ஆண்டு படகு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதை நினைவு கூறும் புகைப்படம் உள்ளது. அட்டையின் பின்புறம் 1800களில் தொடங்கி சென்னையில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு போக்குவரத்துகள் உள்ளன.
நிகழ்ச்சியில் எஸ்.சி.பிரம்மா கூறுகையில், “சென்னை மிகவும் பெருமைக்குரிய இடமாகும். இது கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களை விட மிகப்பழமை யானது. ஜார்ஜ் கோட்டை, கலங்கரை விளக்கம், சென்னை யின் பாலங்கள், சென்னையின் பாரம்பரிய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை குறிக்கும் 4 தபால் உறைகள் ஏற்கெனவே வெளியிடப் பட்டுள்ளன,” என்றார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் கிளைவ் அரங்கில் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னைப் பற்றிய புகைப்பட கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஜி.மகேஸ்வரி கூறுகையில், “சென்னையின் பாரம்பரிய கட்டிடங்கள் பல காரணங்களால் சேதமடைந்து வருகின்றன. நகரமயமாக்கல் காரணமாகவும், மக்களின் கவனக் குறைவு காரணமாகவும் இவை தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன.
பாரம்பரிய கட்டிடங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்,” என்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர். நல்லி குப்புசாமி கூறுகையில், “முன்பு, சென்னையிலிருந்து திருப்போரூர் முருகன் கோயிலுக்கு செல்ல பங்கிங்ஹாம் கால்வாயில் படகு வழியாக செல்வதையே மக்கள் விரும்பினர். ட்ராம்கள் வேப்பேரியிலிருந்து இயக்கப்பட்டன. சாலைகளில் “ட்ரிங்” “ட்ரிங்” என்ற ட்ராம் ஒலி இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டு பல நினைவுகளை எழுப்புகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சி தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மெட்ராஸ் பாரம்பரிய ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014
No comments:
Post a Comment