சென்னை பாரிமுனையில் இயங்கி வந்த ஸ்டேட் வங்கி பிரதான கிளை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வங்கி பணம், வாடிக்கையாளர் நகை மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் தீக்கு இறையாகாமல் தப்பின. அங்கிருந்த பணம், மற்றும் நகைகள் மற்ற கிளைகளுக்கு மாற்றப்பட்டன.
நேற்று முன்தினம் நடந்த இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்து உள்ள இடத்தில் 3 கிளைகள் இருந்து உள்ளது. இதனால் இதன் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அவர்களுடைய நகைகள், ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் பிரதாப்ராவ் சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
பாரிமுனை ஸ்டேட் வங்கி பிரதான கட்டிடம் தீவிபத்துகாண காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மின் கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணங்களால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து இப்போது சொல்ல இயலாது. கூடிய விரைவில் விபத்துக்கான காரணத் தெரிந்துவிடும். வாடிக்கையாளர்களுடைய பணம், நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் எந்தவித சேதமும் ஏற்படாத வண்ணம் உள்ளன.
அவை எழும்பூரில் ரெயில் நிலையத்தில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை. இந்த விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இயங்கிய 3 கிளைகள் வேறு கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை மெயின் கிளை பிரகாசம் சாலையில் உள்ள பிராட்வே கிளைக்கு மாற்றப்பட்டது. ராஜாஜி சாலை கிளை ஸ்டேட் வங்கி எழும்பூரில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
சிறுதொழில் கடன் தரும் கிளையான எஸ்.எம்.ஏ. சென்னை கிளை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்டு உள்ளது. அந்த கிளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்கள் வங்கி பணிகளை மேற் கொள்ளலாம்.
மாற்றப்பட்ட 3 கிளைகளும் இன்று முதல் செயல்படுகிறது. புதிய இந்த கிளைகள் பற்றி விவரங்கள் தெரியாமல் அலைந்து திரியும் வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கு தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விபத்து நடந்த பாரம் பரிய கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் வங்கி பணி தொடங்க முடியுமா என்பது குறித்து தொல்லியல் துறை நிபுணர்ககளிடம் கருத்து கேட்டபிறகுதான் முடிவு செய்யப்படும்.
இதுபோன்ற பாரம்பரிய மிக்க கட்டிடத்தில் செயல்படும் வங்கிகளில் தீவிபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 4 வங்கிகள் பாரம்பரிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் செயல்படும் வங்கி கிளைகள் ஆராயப்படும்.
தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் கிடைத்த அதே வசதிகள் இந்த கிளைகளுக்கும் கிடைக்கும். எந்த கஷ்டமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பொது மேலாளர் சஞ்சீவ்சடோ, உதவி பொது மேலாளர் சீனிவாசராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதிய கிளைகள் பற்றி தகவல் அறிய சென்னை மெயின் கிளை 94458 61231, ராஜாஜி சாலை கிளை 94458 60962, எஸ்.எம்.சி. சென்னை கிளை 94458 66364 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
திங்கள், ஜூலை 14, 2014
திங்கள், ஜூலை 14, 2014