கல்லூரிப் படிப்பை முடித்து அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்களின் மனத்தில் சட்டென மின்னிடும் பெயர் சென்னை. தலைநகருக்கு வந்தால் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் எனும் நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.
இதனால்தான் தமிழகத்தின் கிராமங்களிலிருந்தும் சிறு நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் சென்னையை நோக்கித் தினந்தோறும் பயணப்படுகிறார்கள். அவர்களை ஏமாற்ற விரும்புவதில்லை சென்னை என்னும் தாயுள்ளம் கொண்ட இம்மாநகரம்.
எல்லோரையும் வாரி அணைத்து அவரவர்களுக்குத் தேவையானவற்றைத் தந்து தனது கருணையை வெளிப்படுத்தி நிற்கிறது இது. கணினி, சட்டம், பொறியியல், பொருளாதாரம், தொழில் போன்ற எல்லாத் துறைகளிலும் சாதிக்க விரும்புபவர்களுக்கான களம் அமைத்துத் தருகிறது சென்னை.
கல்வி சிறந்த சென்னை
வேலைக்காக வருபவர்களைப் போல் தேர்வுகளுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவோரும் சென்னைக்கே வருகிறார்கள். இந்திய ஆட்சிப் பணித் தேர்வு போன்ற சகல அரசுத் தேர்வுகளிலும் பங்குகொள்ள விரும்புபவர்களுக்கு அவசியமான பயிற்சி மையங்களும், நூலகங்களும் இங்கே உள்ளன.
தமிழ்நாட்டின் வேறு ஊர்களில் இல்லாத அளவுக்கு அதிகமான நூலகங்கள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மைய நூலகங்கள், அது தவிர பகுதி நேரமாகச் செயல்படும் நூலகங்கள் எனச் சென்னையின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பயன்பெறக்கூடிய அளவில் மாவட்ட நூலகங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானது கன்னிமாரா நூலகம்.
1890-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கப் பட்ட இந்நூலகம் ஐக்கிய நாடுகள் சபையின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது. மிகப் பழமையான பல புத்தகங்களும் மதிப்புமிக்க பத்திரிகைகளையும் இந்த நூலகம் போற்றிப் பாதுகாத்துவருகிறது. இந்திய ஆட்சிப் பணித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலருக்கும் இந்த நூலகம் கல்விக்கூடமாகத் திகழ்ந்துவருகிறது.
இது மட்டுமல்லாமல் தமிழக அரசு சமீபத்தில் உருவாக்கியிருக்கும் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த நூலகம் உயர் தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பிரத்யேகப் பிரிவு உள்பட ஆறு பிரிவுகளுடன் அமைந்துள்ளது. மேலும் இந்த நூலகம், யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கோட்டையூரில் செயல்பட்டுவந்த ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் அனைவருக்கும் பயன்பெறும் பொருட்டு இப்போது சென்னை தரமணியில் செயல்பட்டுவருகிறது. சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திவரும் இந்த நூலகம் உலகம் முழுக்க உள்ள ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் இயங்குகிறது.
தொழில்நுட்பத்தின் தலைநகரம்
அரசு வேலைகளைக் குறிவைப்பவர்களுக்கு இவைபோன்ற நூலகங்கள் உதவுகின்றன என்றால், கணினித் துறை, ஆட்டோமொபைல் துறை போன்ற தனியார் நிறுவனங்களின் வேலைகளுக்கென வருபவர்களுக்கும் சென்னை இன்முகம் காட்டுகிறது. இந்திய மென்பொருள் துறையில் பெங்களூருக்கு அடுத்தபடியாக சென்னையே ஆதிக்கம் செலுத்துகிறது.
டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற முக்கிய மென்பொருள்கள் நிறுவனங்கள் அநேக வேலைவாய்ப்புகளைத் தருகின்றன. இது தவிர பிபிஓ எனச் சொல்லப்படும் கால் சென்டர்கள் தொடர்பான வேலைகளும் இளைஞர்களுக்காகக் காத்திருக்கின்றன.
வாகனங்களின் நகரம்
உலகின் முன்னணி கார், மோட்டார் தயாரிப்பில் இந்தியா ஆறாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் மோட்டர் வாகனத் தயாரிப்பு தொழில் சென்னையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன.
ஆசியாவின் டெட்ராய்ட் எனச் சென்னை அழைக்கப்படுவதே இதனால்தான். இந்தியாவின் கார் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதன்மையானதான வூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் இரண்டு கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது. தென்கொரியாவுக்கு வெளியே உள்ள மிகப் பெரிய உற்பத்தி நிறுவனங்கள் இவை. இவற்றில் ஆண்டுக்கு 6 லட்சம் கார்கள் உற்பத்தியாகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள நிஸான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் கார்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன.
பிஎம்டபுள்யூ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கார் அஸெம்பிளிங் யூனிட் ஒன்று சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் செயல்பட்டுவருகிறது. ஃபோர்டு
இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை சென்னைக்கு அருகே மறைமலைநகரில் இயங்கிவருகிறது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை திருவள்ளூரில் இயங்கிவருகிறது.
ராயல் என்ஃபீல்டு மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இருசக்கர வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையும் சென்னைக்கருகே அமைந்துள்ளது. இந்திய காவல்துறையில் இந்நிறுவனத்தின் வாகனமான புல்லட் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய ஆட்டோமொபைல் தொழிற்சாலை நிறுவனங்கள் சென்னையை மையமிட்டுச் செயல்பட்டுவருவதால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் ஆகிய துறைகளில் பட்டம் படித்தவர்களும் டிப்ளமோ படித்தவர்களும் இந்த நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். இது மட்டுமன்றி ஐடிஐ படித்தவர்கள் பெரும்பாலானவர்களுக்கும் இங்கே வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி சிப்காட், பெருங்குடி எல்காட் போன்ற தொழில் வளாகங்களில் எண்ணிலடங்கா சிறு தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவை எல்லாம் தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை வாரிவழங்கிவருகின்றன. இப்படி அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் பெருகிவருவதால் சென்னை ஏராளமான இளைஞர்களை ஈர்த்துவருகிறது.
தி இந்து:திங்கள், ஆகஸ்ட் 18, 2014
No comments:
Post a Comment