Showing posts with label கோவில்கள். Show all posts
Showing posts with label கோவில்கள். Show all posts

Thursday, October 16, 2014

பாடி திருவல்லீஸ்வரர் ஆலயம்


குரு பெயர்ச்சி பரிகாரத்துக்கு பாடி திருவல்லீஸ்வரர் ஆலயம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மயிலாப்பூர், திருவான்மிïர், திருவேற்காடு, திருவிற்கோலம், இலம்பையம், கோட்டூர், திருவூரல் தக்கோலம் திருவாலங்காடு, திருவெண்பாக்கம், திருப்பாச்சூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர் ஆகிய 11 புகழ் பெற்ற சிவாலயங்கள் உள்ளன. 

இந்த பதினோரு சிவாலயங்களுக்கு மத்தியில் நடு நாயகமாக பாடி திருவல்லீஸ்வரர் கோவில் அமைந்து இருக்கிறது. அதாவது சுற்றிலும் மற்ற சிவாலயங்கள் மாலையிட்டது போல இயற்கையாகவே அமைந்திருக்கும் நிலையில், இத்தலம் மத்தியில் அமைந்துள்ளது. இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழமையான ஆலயம். 

ஆனால் சிறப்பான திருப்பணிகள் காரணமாக இந்த கோவில் புத்தம் புதிது போல `பளிச்'சென காணப்படுகிறது. தேவார காலத்தில் திருவலிதாயம் சிந்தாமணிபுரம் என்று இத்தலம் அழைக்கப்பட்டது. தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32-ல் இத்தலம் 21-வது இடமாக உள்ளது. பல புராண நிகழ்வுகள் இத்தலத்துடன் தொடர் புடையவைகளாக இருக்கின்றன.


திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலம் ராமபிரான், ஆஞ்ச நேயர், சூரியன், சந்திரன், இந்திரன், பரத்வாஜர், வியாழபகவான் உள்பட பலர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகவும், சாப விமோசனம் பெற்ற தலமாகவும் உள்ளது. 

ஏராளமான ரிஷிகளும், மகான்களும் இத்தலத்து ஈசனை பூஜித்து பெரும் பேறு பெற்றுள்ளனர். குருபகவான் தனக்கு ஏற்பட்ட சாபத்தை முழுமையாக நிவர்த்தி செய்து கொண்டது இந்த தலத்தில்தான்.


பிரம்மாவின் மகள்களான கமலி, வல்லி இருவரும் இத்தலத்து இறைவனை பூஜித்து விநாயகரை இறைவன் உத்தரவுப்படி திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள விநாயகர் திருமண கோலத்தில் உள்ளார். 

விநாயகரின் திருமணம் இத்தலத்தில் நடைபெற்றதாக சொல்கிறார்கள். எனவே திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து, வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோவிலை வலம் வந்தால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. 


இந்த கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. கோவிலில் 3 நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் எழில் மிகுந்த கொடி மரத்தை காணலாம். இதையடுத்து பலி பீடமும் நந்திஸ்வரரும் உள்ளனர். 

பிரதோஷ நாட்களில் இந்த நந்தி பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகள் கண் கொள்ளாக் காட்சியாகும். சனி பிரதோஷ நாட்களில் இவரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வது அதிசயம். நலம் தரும் இந்த நந்தீஸ்வரரை வணங்கி, விடை பெற்று உள்ளே செல்ல வேண்டும். 

கருவறையில் மூலவர் திருவலிதாய நாதர் உள்ளார். இவர் சுயம்பு மூர்த்தி. இவரை வழிபட வரிசையில் நிற்கும் போதே தாயார் ஜெகதாம்பிகையும் நாம் வழிபட முடியும். அதற்கு ஏற்ப இத்தல அமைப்பு உள்ளது. பெரும்பாலான சிவாலயங்களில் இத்தகைய அமைப்பு பார்க்க முடியாது. 

தாயார் ஜெகதாம்பிகை நின்ற கோலத்தில் அருள்கிறார். கொள்ளை அழகுமிக்க அவளை ஆனந்தம் 
பொங்க வழிபட்டால் நிச்சயம் அவள் நம் குடும்பத்துக்கு ஐஸ்வர்யத்தை அள்ளித் தருவாள். முதலில் வழிபாடு செய்யப்பட்டு வந்த ஜெகதாம்பிகை சிலை சற்று சேதமாகி விடடது. இதனால் அதை கருவறைக்குள் வைத்து விட்டு, புதிய விக்கிரகம் அமைத்துள்ளனர். 

அம்பாளுக்குரிய சிம்மமும், பலி பீடமும் வெளிப்பிரகாரத்தில் உள்ளது. கருவறை கஜபிருஷ்ட அமைப்புடையது. அதில் விநாயகர், தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டீகேசுவரர், துர்க்கை உள்ளனர். மூலவரை வழிபட்ட பிறகு 
கருவறையை சுற்றிய உள்பிரகாரத்தில் வலம் வரலாம். உள் பிரகாரத்தில் கருவறை பின்புறம் 6 சன்னதிகள் உள்ளன. 

முதல்  
சன்னதியில் சோமாஸ்கந்தர் உள்ளார். அடுத்த விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், அனுமன் பூஜித்த லிங்கம், மீனாட்சி சுந்தரேசுவரர், பரத்வாஜர் வழிபட்ட லிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன. திருப்புகழில் இத்தலத்து முருகன் பாடல் உள்ளது. 

இதையடுத்து நாயன்மார்களில் சிலரும், நாகர்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை வணங்கியபடி வந்தால் அம்பாள் சன்னதி பின் பிறம் மூலையில் பைரவர் நின்று அருள்வதை காணலாம். அந்த பிரகாரத்தில் உள்ள தூண்களில் நடராஜர், கோதண்டராமர், மச்சவதார மூர்த்தி, 
கூர்மாவதார மூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

சிவனை வழிபட்டபடி ஆஞ்சநேயர் உள்ளார். அம்பாளுக்கு எதிரே உள்ள சன்னதியில்  
உயரே அஷ்டலட்சுமிகள் அமைக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் சூரியன், நால்வர், முருகர் சிலைகளை காணலாம். இங்கு திருவல்லீஸ்வரரை மனம் உருக வழிபட்டால் உடல் நலம் உண்டாகும். திருமணத் தடை உள்பட எல்லா தடைகளும் விலகும். 

முக்கிய விஷயங்களுக்கு செல்லும் முன்பு இவரை வழிபட நிச்சயம் வெற்றி உண்டாகும். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் இவரை வழிபட நற்பேறு கிடைக்கும். உள்பிரகாரத்தில் வழிபாடுகளை முடித்த பிறகு வெளி பிரகாரத்தை சுற்றி வரலாம். இந்த பிரகாரத்தில் சுற்றிலும் நந்தவனம் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது. 

நந்தவனத்து மலர்களை பார்த்துக் கொண்டே நடந்தால் கோசாலையை பார்க்
கலாம். இதையடுத்து நவக்கிரக சன்னதி உள்ளது. அந்த சன்னதி எதிரே சற்று தூரத்தில் உள்ள கிணறுதான் பரத்வாஜர் தீர்த்தமாக கருதப்படுகிறது. ஆதி காலத்தில் இத்தலத்தில் முக்தி தீர்த்தம் அனுமன் தீர்த்தம் உள்பட 5 பெரிய தீர்த்தங்கள் இருந்ததாம். 

கால ஓட்டத்தில் அவை மறைந்து விட தற்போது பரத்வாஜ் தீர்த்தம் மட்டும் மிஞ்சியுள்ளது. நவக்கிரக சன்னதிக்கும் கொடி மரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் குருபகவானுக்கு தனி சன்னதி எழுப்பியுள்ளனர். குரு மேற்கு பார்த்து உள்ளார். இது சமீபத்தில் கட்டப்பட்டதாகும். 


வியாழன் தோறும் இந்த குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் குரு சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும். பாவங்கள் நீங்கும். 9 வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட குரு அருள்கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சி இத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடக்கிறது. 

ஆலங்குடிக்கு அடுத்தப்படியாக இத்தலம்தான் குரு பகவானுக்குரிய பூஜைகளை செய்ய மிகவும் உகந்த தலமாக உள்ளது. இந்த ஆண்டு ஜுன் 13-ந்தேதி குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய 7 ராசிக்காரர்களும் குரு பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டும் என்று கணித்துள்ளனர். 

இதற்காக இத்தலத்தில் 12, 13, 14-ந்தேதிகளில் 3 நாட்கள் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை மற்றும் குரு பரிகார ஹோமத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிகார ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ராசிக்கு ஏற்ப பரிகார நிவர்த்தி செய்யப்பட உள்ளது. 


பாடி டி.வி.எஸ் பஸ் நிறுத்தத்தில் இறங்கி படவட்டம்மன் கோவில் எதிரில் செல்லும் தெரு வழியாக வந்தால் சீர்மிகு இத்தலத்தை மிக எளிதில் சென்றடையலாம். இத்தலத்தில் காலடி எடுத்து வைத்தாலே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

SSN  16 Oct 2014

சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்கள்




பைராகிமடம், சவுகார்பேட்டை : 
இத்தலத்தில் லட்சுமி நரசிம்மன் சந்நிதி மகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும். 


திருவல்லிக்கேணி யோக நரசிம்மர் :
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்பார்கள். 

ஸ்ரீவேங்கட நரசிம்மர் கோவில், மேற்கு மாம்பலம் :
900 ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி தெள்ளிய நரசிம்ம சுவாமி இங்கே எழுந்தருளி அவர் முன்னிலையில் இங்குள்ளவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்ற பெயர் பெற்றார். 
ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி, வேளச்சேரி : 
இங்கு சிறுவன் பிரகலாதனுடன் உரையாடுவதற்கு ஏற்றவாறு சந்நிதிக்கு எதிரே கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதாழ்வார் நிற்கிறார். பகவான் யோக நரசிம்மர் சிறந்த வரப்பிரசாதி. 

பொன்னிமேடு நரசிம்மர் : 
சென்னை மூலக்கடை ரெட்ஹில்ஸ் சாலையில் மூலக்கடையிலிருந்து வெகு அருகில் உள்ளது இத்தலம். இங்கு நரசிம்மரின் மிக உயரமாக நிற்கும் சிலை உள்ளது. கூடவே லட்சுமி தேவியும் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உயரமான இரண்டு நிற்கும் சிலைகளில் இதுவும் ஒன்று. 
நங்கநல்லூர் நரசிம்மர் :
மகாலட்சுமி (நங்கை) இப்பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கோவில் கொண்டிருக்கிறாள். நங்கை நல்லூர் என்பதே மருவி நங்கநல்லூர் ஆகிஇருக்கிறது. அந்தக் கோவில்தான் நரசிம்மர் கோவில். லட்சுமி நரசிம்மர் கோவில் புதையுண்டு போயிற்று, தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார். 

இத்தலம் ஆதிகாலத்தில் தட்ஷண திபாலயா என்று அழைக்கப்பட்டதாகவும், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் கேட்டுக் கொண்டபடி நரசிம்மர் இங்கேயே தங்கி அருள் பாலிக்க ஒப்புக் கொண்டதாகவும் வரலாறு இருக்கிறது.  உள்ளே சக்கரத்தாழ்வார் தனது பதினாறு கைகளில் விதவிதமான ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். கச்கரத்தாழ்வாரின் பதினாறு ஆயுதங்களும் பதினாறு வகையான செல்வங்களைக் குறிக்கின்றன. 

இவரின் பின்னால் ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா விக்ரகம் உள்ளது. அடுத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி உள்ளது. 5 அடி உயர முள்ள சிலா விக்ரகம். திருமுடியில் கிரீடம். கழுத்தில் பெரிய நீலக்கல் பதித்த மாலை, நான்கு கரங்களின் மேலே உள்ள கரங்களில் சங்கும். சக்கரமும் உள்ளன. இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்காரம் செய்ததால் இங்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. சோளிங்கரில் உள்ளது போல் இங்கும் சடாரியல் நாகம் காணப்படுகிறது. 

செங்காடு- யோக ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் :
யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் இருவரையும் ஒரே இடத்தில் சோளிங்கர் மாதிரி மலை ஏறாமல் தரையிலேயே பார்க்க வேண்டுமானால் திருப்போரூர் அருகே உள்ள செங்காடுக்கு செல்ல வேண்டும். 
மறைமலைநகர் நரசிம்மர் :
சென்னையை அடுத்த மறைமலை நகர் போர்ட் மோட்டார் கம்பெனி அருகில் உள்ளது இந்த அபூர்வ நரசிம்மரின் கோவில். ஆதிசேஷன் பீடத்தில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்துள்ளது அற்புதமாக உள்ளது. ஆதிசேஷன் குடை பிடித்த மாரி உள்ளது. தாயாரும் பெருமாளும் இருவரும் ஒரு கையால் ஒருவரை ஒருவர் அணைத்த மாதிரி இருக்கின்றனர். 

நரசிம்மரின் மந்திரத்தால் செய்யப்பட்ட அட்சர மாலையும் சாளக்கிராம மாலையும் நரசிம்மருக்குச் சாத்தப்பட்டுள்ளது. தாயார் சந்நிதியில் தாயாருக்கு மகாலட்சுமி மந்திரத்தால் அட்சய மாலை செய்து சாற்றப்பட்டுள்ளது. மூலவரும் தாயாரும் தாமரை மலர்கள் மேல் பாதங்களை வைத்துள்ளனர். இது ஒரு பரிகாரத்தலம்.

SSN 16 Oct 2014

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவில்



திவ்யதேசக் கோவில்கள் 108-ல் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் மட்டும் தான் பெருமாள் குடும்பசகிதமாக அருள்பாலிக்கிறார். ப்ரஹ்மாண்ட புராணத்தில் இக்கோயிலின் வரலாறு கூறப்பட்டுள்ளது. சுமதி ராஜன், ஏழுமலை திருவேங்கடத்தானிடம் சென்று, பெருமாளை அர்ஜுனனுக்கு (பார்த்தனுக்கு) சாரதியாகவும் கீதாச்சார்யானாகவும் வந்த கோலத்தில் காண வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்.



ஏழுமலையான், சுமதி ராஜனின் கனவில் அருள் பாலித்து, அவனை ப்ருந்தாரண்ய க்ஷேத்திரத்த்ற்கு (தற்போதைய திருவல்லிக்கேணி) செல்லும்படியும், தான் அங்கு வந்து அவன் விரும்பிய கோலத்தில் தரிசனம் தருவதாகக் கூறினார்.


அதே சமயம் வேதவியாசர் தனது சிஷ்யர் ஆத்ரேயரிடம் ப்ருந்தாரண்ய க்ஷேத்திரத்திற்குச் சென்று தவம் புரியுமாறு கூறி, அவரிடம் ஒரு திவ்ய மங்கள விக்ரகத்தையும் கொடுத்தார். 

அந்த பெருமாள் விக்ரகம் வலது கையில் சங்குடனும் இடது கை ஞான முத்ராவுடன் பெருமாளின் திருவடிகளை நோக்கியவாறும் இருந்தது. இடது கையில் உள்ள ஞான முத்ரா பெருமாளின் திருவடிகளை நோக்கியவாறு இருப்பதன் முக்கியத்துவத்தை பகவத் கீதையின் 18-வது அத்தியாத்தின் 66-வது ஸ்லோகம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ப்ருந்தாரண்ய ஷேத்திரத்தில் சுமதி ராஜனும், ஆத்ரேய ரிஷியும் சந்தித்துக்கொண்டு நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டு இருவரும் விக்ரகத்தைப் பூஜித்துவந்தனர். பெருமாளும் அவர்கள் இருவருக்கும் பார்த்தசாரதியாக தரிசனம் தந்ததாகக் கூறப்படுகிறது.

விக்கிரகங்களின் நிலைகள்

கர்ப்பக்கிரகத்தில் பிரதான மூர்த்தியாக, கீதாசார்யன் கோலத்தில் உள்ள பெருமாள் ஸ்ரீ வேங்கடக்ருஷ்ண ஸ்வாமியாகப் பூஜிக்கப்படுகிறார். பெருமாளின் வலது புறத்தில் ஸ்ரீ ருக்மணி தாயாரும், இடது புறத்தில் பகவான் கிருஷ்ணனின் தம்பியான சாத்யகியும் அருள் பாலிக்கின்றனர். 

ஸ்ரீ ருக்மணி தாயாரின் வலது புறத்தில் பகவான் கிருஷ்ணனின் அண்ணனான பலராமர் வட திசை நோக்கி அருள் பாலிக்கின்றார். கர்ப்பக்கிரகத்தின் வடக்குப் பக்கத்தில் பகவான் கிருஷ்ணனின் புதல்வன் ப்ரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் தென் திசை நோக்கி அருள் பாலிக்கின்றனர்.

பெருமாளைச் சுற்றி அவரது குடும்பத்தினர் நின்றுகொண்டிருக்கும் நிலைகள், அவர்கள் வாழ்க்கையில் நடைப்பெற்ற ஒரு சம்பவத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. கிருஷ்ணர், ருக்மணி தேவியை மீட்டு (சிசுபாலனோடு நடக்கவிருந்த விவாகத்திலிருந்து) வரும்பொழுது சாத்யகி தேரோட்டியாக இருந்தார். ப

லராமர், கிருஷ்ணனுக்கு உதவி செய்யும் பொருட்டு, தேரில் கிருஷ்ணனுக்குச் சற்று பின்னே வலது பக்கம் இருந்தார். 

ருக்மணி தேவியை மீட்ட பிறகு, ருக்மணி தேவி கிருஷ்ணனுக்கும் பலராமருக்கும் நடுவே அடைக்கலம் அடைந்தவாறு தேரில் வந்தார். 

இந்த நிகழ்வில் அவர்கள் இருந்த நிலையில்தான் இக்கோயிலில் அருள் பாலிக்கின்றனர்.

பிரத்யும்னனும், அநிருத்தனும் வடக்குப் பக்கம் சற்றுத் தொலைவில் தென் திசை பார்த்து இருப்பது, குடும்பத்தில் பெரியோர்களுக்குச் சிறியவர்கள் வழங்க வேண்டிய மரியாதையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. 

உற்சவ மூர்த்தியான ஸ்ரீ பார்த்தசாரதியின் முகத்தில் தழும்புகள் காணப்படுகின்றன. இத்தழும்புகள், அர்ஜுனனை நோக்கி பிதாமகர் பீஷ்மர் எய்திய அம்புகளால் ஏற்பட்டதைக் குறிக்கிறது.

ஸ்ரீ பார்த்தசாரதியின் சன்னதிக்கு வலதுபுறம், கிழக்கு நோக்கி வேதவல்லி தாயாராக்கு தனி சன்னதி உள்ளது. 

இக்கோயிலில் உள்ள குளத்தில் மஹரிஷி ப்ருகுவிற்கு, ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரே, ஸ்ரீ வேதவல்லியாக பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த குளத்தில் ஐந்து கேணிகள் உள்ளதாகவும், எப்பொழுதும் அல்லி பூக்கள் நிறைந்து இருந்தது என கூறப்படுகிறது. 

இதனாலேயே இந்த ஷேத்திரம் திருவல்லிக்கேணி என வழங்கப்படுகிறது.
ஸ்ரீ ரங்கநாதருக்கும், ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கும் (சீதா பிராட்டி மற்றும் மூன்று தம்பிகளுடன்), ஸ்ரீ நரசிம்ம சுவாமிக்கும்,ஸ்ரீ கஜேந்திர வரதருக்கும்,ஸ்ரீ ஆண்டாளுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.


தி இந்து:வியாழன், அக்டோபர் 16, 2014