Showing posts with label கொஞ்சம் சினிமா ...கொஞ்சம் பாப்கார்ன் :. Show all posts
Showing posts with label கொஞ்சம் சினிமா ...கொஞ்சம் பாப்கார்ன் :. Show all posts

Sunday, August 17, 2014

கொஞ்சம் சினிமா ...கொஞ்சம் பாப்கார்ன் :அஞ்சான்



அண்ணன் ராஜுவை (சூர்யா) சந்திக்க கன்னியா குமரியிலிருந்து மும்பை வருகிறான், கிருஷ்ணா (சூர்யா). அண்ணன் வெறும் ராஜு அல்ல. ராஜு பாய் என்று அறியப் படும் தாதா என்பதில் தொடங்கி அவனது கடத்தல் தொழில், செல்வாக்கு பற்றிய சம்பவங்கள் கிருஷ்ணாவின் தேடலில் ப்ளாஷ் பேக்கில் விரிகின்றன.

மும்பையின் நிழல் உலக சாம்ராஜ்யத்தின் புதிய சக்திகளாக வளர்ந்துவரும் ராஜு சந்துரு கூட்டணி பலருக்கும் உறுத்தலாக இருக்கிறது. மும்பையின் பெரிய தாதாவான இம்ரான் பாய் நண்பர்கள் இருவரையும் விருந்துக்கு அழைத்து எச்சரித்து அவமானப்படுத்துகிறார். அவருடைய சக்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவரை எதிர் கொள்ள ராஜு துணிகிறான். அதன் விளைவுகளை ரத்தம் சொட் டச் சொட்டச் சொல்கிறது படத்தின் மீதிக் கதை.

மும்பையின் மாபெரும் நிழல் உலகத்தை ஒண்டி ஆளாகக் கதாநாயகன் எதிர்கொள்ளும் அபத்தம்தான் அஞ்சான். உயி ருக்குயிராக நேசித்த நண்பனைக் கொன்றவனை யும் அவனுக்கு உதவிய துரோகி களையும் ஒவ்வொருவராகக் கொல்வதுதான் படத்தின் கதை, திரைக்கதை எல்லாமே. துரோகி களைக் கண்டுபிடிப்பதிலோ அவர்களைக் கொல்வதிலோ புத்தி சாலித்தனத்துக்கு எந்த இடமும் இல்லை. 

துரத்தல், மிரட்டல், தாக்குதல். அவ்வளவுதான். எக்கச் சக்கமான சண்டைகள். ஏகப்பட்ட தோட்டாக்கள். அசந்தால் பார்வையாளர்களுக்கும் இரண்டு அடி விழும்போல.
மும்பை நிழல் உலகம் பற்றிய ஆய்வு எதுவுமின்றி எடுக்கப் பட்ட படங்களில் முதலிடத்தை அஞ்சானுக்குக் கொடுக்க வேண்டும். மும்பையின் யதார்த் தமோ அங்கு நிழல் உலகம் இயங்கும் விதத்தையோ சிறிதள வும் படத்தில் பார்க்க முடிய வில்லை. 

காட்சிகள் சவடாலான வசனங்களாலும் அடிதடிகளாலும் நிரப்பப்படுகின்றன. மகிமைப் படுத்தப்படும் நட்பும் அதற்கான நெகிழ்ச்சியுடன் அல்லாமல் வசனங்களால் சொல்லப்படுகிறது. காதல் காட்சிகளிலும் லிங்கு சாமியின் வழக்கமான ரசனை அம்சம் இல்லை. பொதுவாக லிங்கு சாமியின் படங்களில் நாயகியின் பாத்திரம் ஓரளவு வலுவாக இருக்கும். இதில் அதுவும் இல்லை. நகைச்சுவை என நம்பி எடுக்கப் பட்டிருக்கும் காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன.

தன்னைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடப்பதைக் காணும் ராஜு, தன் நண்பனின் பாது காப்பு குறித்து அஞ்சி போன் செய்கிறான். அதே நேரத்தில் நண்பனைக் கொல்லும் வில்ல னுக்கு நாயகன் இருக்கும் இடம் தெரியவில்லையாம். அப்படி யானால் நாயகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே போகலாம்.

இதையெல்லாம் தாண்டிப் படம் விறுவிறுப்பாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. கிருஷ்ணா யார் என்னும் சஸ் பென்ஸை முதல் பாதியிலே உடைத்துவிடுகிறார் இயக்குநர். கிருஷ்ணா ராஜுவைத் தேடி அலைவதில் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. கமிஷனர் பெண் ணைத் திருமண ஊர்வலத்தி லிருந்து கடத்தும் காட்சி விளை யாட்டுத்தனமாய்க் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.
படத்தின் நீளம் ரொம்ப அதிகம், சமந்தா, சூர்யா ஆட்டம் போடும் இந்திப் பாடல், கர்நாடக இசைக் ‘கச்சேரி’ எனப் பல காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. பாடல்களும் அதிகம்.

‘கொலை செய்தால்தான் பதுங்கி இருக்கணும்னு இல்லை. பயத்தில்கூட பதுங்கி இருக்க லாம்ல’ என்பது போன்ற வசனங் கள் (பிருந்தா சாரதி) கவனம் ஈர்க்கின்றன. சூர்யாவின் நடிப்பைப் பற்றிச் சொல்லப் புதிதாக எதுவுமில்லை. காரணம் அவர் புதிதாக எதையும் செய்ய இந்தப் படம் இடம் தரவில்லை.

சமந்தாவின் நடிப்புத் திறனை வெளிப்படுத்த எந்த வாய்ப் பையும் தராத இயக்குநர், அவரைக் கவர்ச்சி அவதாரம் எடுக்கவைத்திருக்கிறார். சமந்தா வுக்கு அது பொருந்துகிறதா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பு. கதாநாயகனிடம் அடிவாங்காத வேடம் வித்யுத் ஜம்வாலுக்கு. தனக்குத் தரப்பட்டிருக்கும் ஒரே ஒரு சண்டையில் மனிதர் அசத்தி விடுகிறார்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்ப திவும், யுவன் சங்கர் ராஜாவின் இசை தள்ளாட்டத்துக்கு லேசாக முட்டுக்கொடுக்கும் ஊன்றுகோல்.

அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பினையும், யூகிக்க முடியாத அளவுக்கு பார்வை யாளனுக்கு நேரம் கொடுக்காமல் இருப்பதுதான் ஆக்‌ஷன் சினிமா. ஆனால் அடுத்தடுத்த காட்சி களைத் திரையரங்கில் ரசிகர்கள் சொல்லிக்கொண்டே இருக்கி றார்கள்.

லிங்குசாமி, நாலு கதைகளைப் பின்னுக்கு தள்ளி அஞ்சான் எடுத்தாராம். அந்தக் கதைகள் எப்படி இருக்கும்?

நோஞ்சான்!

தி இந்து:ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2014



Friday, August 15, 2014

கொஞ்சம் சினிமா ...கொஞ்சம் பாப்கார்ன் :சினிமா ராண்டேவூவின் திரையிடல் மாதம் தோறும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

திரையிடலுக்கு பின் நடந்த உரையாடல்


மனித மனதின் ஆழமான உணர்வுகளைப் புதைகுழிகளிலிருந்து மீட்டெடுக்கும் மந்திரத் திறவுகோல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஊடகம்தான் சினிமா. ஆனால் சினிமா பற்றிய புரிதல்களைக் கூர்மைப்படுத்தவோ தீவிரப்படுத்தவோ தமிழ்ச் சூழலில் மிக அரிதாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாற்று சினிமாவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்கூட வெகுஜன (mainstream) சினிமாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.

வெகுஜன சினிமாவில் ரசனையின் தளத்தை விரிவுபடுத்தவும் சினிமா பற்றிய உரையாடல்களைக் கூர்மைப்படுத்தும் நோக்குடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘சினிமா ராண்டேவூ’ (Cinema Rendezvous) என்கிற அமைப்பை உருவாக்கி நடத்திவருகிறார் திரைப்பட மற்றும் நாடகக் கலைஞரான ஷைலஜா செட்லூர். சினிமா ராண்டேவூ மூலம் மாதம் ஒரு திரையிடல், திரையிடப்படும் சினிமா தொடர்பாக விவாதங்கள் என்று சினிமா பற்றிய தீவிரமான உரையாடல்களைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறது சினிமா ராண்டேவூ.

“மெயின் ஸ்ட்ரீம் சினிமா பற்றிய உரையாடல்கள், மாற்று சினிமாவைப் பரவலாக்குதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு நொடி அழவும் அடுத்த நொடி சிரிக்கவும் வைக்கும் மாய உலகம் சினிமா. சினிமா என்கிற ஊடகம் பற்றித் தீவிரமான உரையாடல்கள் நிச்சயம் தேவை” என்கிறார் ஷைலஜா.

பெரும்பாலும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுபவர்கள் பரிந்துரைக்கும் படங்களே திரையிடப்படுகின்றன. “சினிமா ராண்டேவூவில் திரையிடப்படும் பெரும்பாலான படங்கள் மொழி பேதங்களைக் கடந்தவை. உலக சினிமாவிலிருந்து உள்ளூர் சினிமா வரை எங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பல படங்களை நாங்கள் திரையிடுகிறோம். அதுகுறித்து உரையாடுகிறோம். அந்தப் படங்களைத் தமிழ்ச் சூழலோடு பொருத்திப் பார்த்து எங்களுக்குள் பேசிக்கொள்கிறோம்” என்றும் ஷைலஜா குறிப்பிடுகிறார். சுஹாசினி மணிரத்னம், ரோஹினி, இயக்குநர்கள் அட்லி, வெற்றிமாறன், சமுத்திரகனி, ராம், கே.எஸ்.ரவிகுமார், தியாகராஜன் குமாரராஜா, நாகா, சசி, ஒளிப்பதிவாளர் ராண்டி போன்ற பலர் இந்தத் திரையிடல்களில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விவாதங்களை நெறிப்படுத்தியிருக்கிறார்கள்.

“இந்தத் திரையிடல்களுக்கென்று குறிப்பிட்ட எந்த வரையறையும் இல்லை. சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுபவர்கள் பரிந்துரைக்கும்போது எங்களுக்கும் பல விஷயங்கள் தெரியவருகின்றன. சமுத்திரகனி வந்தபோது நீங்களே ஒரு படத்தை தேர்ந்தெடுங்கள். நானும் பார்க்கிறேன் என்றார். ரிதுபர்னோ கோஷின் சித்ராங்கதா திரைப்படம் ஒரு நடனக் கலைஞரின் பாலின அடையாளம் சார்ந்த போராட்டம் பற்றியது. அது பற்றி பேச அப்சரா ரெட்டியை அழைத்திருந்தோம். பாலின அடையாளத்துடனான போராட்டத்தை கடந்து வந்தவர் அவர்.

சினிமாவை ஆழமாக நேசிப்பவர்களுக்கான, சினிமாவின் மகத்துவத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுக்கான ஒரு களமாக மட்டுமே இது இருக்கிறது. ஒருவரின் சினிமா ரசனையின் அடிப்படையில் அவரைப் பற்றிய புரிதல் ஆழமாகிறது. நட்பிற்கு நல்ல அடித்தளமாய் இருக்கிறது அது அந்த அளவு சக்தி வாய்ந்த ஊடகம்” என்கிறார் ஷைலஜா.

சினிமாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி சினிமா பற்றிப் பெரிய அளவில் புரிதல் இல்லாதவர்கள்கூட ஆர்வத்தோடு சினிமா ராண்டேவூ திரையிடல்களில் கலந்துகொண்டு தங்களது சினிமா பார்வையை விரிவுபடுத்திக்கொள்கிறார்கள் என்று பெருமிதப்படுகிறார் ஷைலஜா. சினிமா ராண்டெவூ அறக்கட்டளையில் ஷைலஜா தவிர இயக்குநர் நாகாவும் ஒளிப்பதிவாளர் அருண்மணி பழனியும் இருக்கிறார்கள். இயக்குநர் ஹரிஹரன் தொடர்ந்து வழிகாட்டுவதாகச் சொல்கிறார் ஷைலஜா. திரையிடல்களோடு நிறுத்திக்கொள்ளாமல் திரை விமர்சனங்களுக்கான பட்டறைகள் நடத்துவது பற்றிய சிந்தனையும் இந்த அறக்கட்டளைக்கு இருக்கிறது.

சினிமா ராண்டேவூவில் இப்போது 40 வருடாந்திர உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு 1500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு திரையிடலுக்கு மட்டும் வர வேண்டும் என்று விருப்பப்படுகிறவர்களிடமிருந்து 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. “இது லாப நோக்கமற்ற அறக்கட்டளை. ஆனால் திரையிடல்களுக்கு ஆகும் செலவுகளுக்காக இந்தக் கட்டணத்தை வசூல் செய்கிறோம்” என்கிறார் ஷைலஜா.
சினிமா ராண்டேவூவின் திரையிடல் மாதம் தோறும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
தொடர்புக்கு  :cinemarendezvous@gmail.com

ஷட்டரும் சசியும்
சினிமா ராண்டேவூவின் ஆகஸ்ட் மாதத்திற்கான திரையிடலில் டிஷ்யூம், பூ முதலான படங்களை இயக்கிய சசி பரிந்துரைத்த ஷட்டர் மலையாளத் திரைப்படம் திரையிடப்பட்டது.

துபாயில் வேலை பார்க்கும் நடுத்தர வயதுக் குடும்பத் தலைவன், துபாய் செல்லும் ஆசையில் அவருக்கு எடுபடி வேலை செய்யும் ஆட்டோ ஓட்டுநர், மார்க்கெட் இழந்த பிறகு மீண்டும் இயக்குநராக முயலும் இயக்குநர் இவர்களுக்கிடையில் ஒரு பாலியல் தொழிலாளி, அவள் மூலம் அவர்களது வாழ்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த உணர்வுபூர்வமான கலைப் படைப்புதான் ஷட்டர்.

துபாயிலிருந்து வந்திருக்கும் குடும்பத் தலைவன் பல சூழ்நிலைகளால் பாலியல் தொழிலாளியோடு பூட்டிய ஷெட் ஒன்றில் மாட்டிக்கொள்கிறான். அவன் அங்கு தங்கியிருக்கும் ஒரு இரவும் ஒரு பகலும் அவன் பார்வையை எப்படி மாற்றுகின்றன என்பதை ஒரு விதமான துல்லியத்தன்மையோடும் மிகையின்றியும் சொல்கிறார் இயக்குநர் ஜாய் மாத்யூ. நடிகராகப் பல படங்களில் தோன்றியிருக்கும் மாத்யூவுக்கு இயக்குநராக இது முதல் படம்.
“எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படம் நெகிழ்த்திவிடுவதாக” சொன்னார் இயக்குநர் சசி.

ஷட்டர் திரைப்படம் விரைவில் தமிழில் மறு ஆக்கம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
தி இந்து:  வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014