Saturday, August 23, 2014

சென்னையும் சினிமாவும்: குதிரைகள் தயவால் உருவான கோடம்பாக்கம்!

நியூடோன் ஸ்டூடியோவில் டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை இயக்கும் டங்கன்
நியூடோன் ஸ்டூடியோவில் டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை இயக்கும் டங்கன்

மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட சென்னையை ஆட்சி செய்ய இங்கிலாந்து அரசால் கவர்னர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மதராஸ் கவர்னராக இருந்தார். அப்போது புனித ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே, வெள்ளையர்களுக்கு உதவி வேலைகளைச் செய்ய அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி ஜார்ஜ் டவுனாக உருவானது. 

பிறகு கோல்கொண்டா சுல்தானின் நிர்வாகத்தில் இருந்த திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர் ஆகிய கிராமங்களை விலைக்கு வாங்கி நகரின் எல்லையை விரிவுபடுத்தினார் கவர்னர் யேல். 

கோட்டைக்குள் இருந்த குதிரை லாயத்தால் சுகாதாரப் பிரச்சினை எழுந்தது. இதனால் குதிரைகளை மேய்க்க ‘பிளாக் டவுன்’ அதாவது கறுப்பர்கள் நகரம் என்றழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் தேர்வு செய்யப்பட்டது. 

ஆனால் அங்கே போதிய மேய்ச்சல் நிலம் இல்லை. மேய்ச்சல் நிலமும் நீர்வளம் நிறைந்த பகுதியைத் தேடியபோது, கண்களில் பட்டது ஆற்றுக்கரையில்(அடையாறு) இருந்த திருப்புலியூர். அதுதான் இன்றைய கோடம்பாக்கம்.

ஆடு மாடுகளை நம்பி வாழும் இடையர்குடி மக்கள் இங்கே அதிகம் வாழ்ந்தனர். கர்நாடக நவாபுகளின் ஆதிக்கத்தில் இருந்த இந்தப் பகுதி, அவர்களது குதிரைப்படை லாயமாகவும் இருந்தது. நவாபுகளிடமிருந்து முதல்தரமான குதிரைகளை வாங்கிய யேல் நிர்வாகம், புலியூருக்குத் தனது குதிரைகளின் லாயத்தை மாற்றியது. நவாபுகள் தங்கள் குதிரைப்படை லாயத்தை உருது மொழியில் ‘ கோடா பாக்’ என்று அழைத்தனர்.

கோடா பாக் என்பதற்குக் குதிரைகளின் தோட்டம் என்பது பொருள். கோடா பாக்கே காலப்போக்கில் கோடம்பாக்கம் என்று மருவியதாகச் சொல்கிறார்கள் சென்னை வரலாற்றை ஆய்வுசெய்தவர்கள். இப்படிப்பட்ட கோடம்பாக்கம் எப்படிக் கனவுகளை உற்பத்தி செய்யும் கோலிவுட்டாக மாறியது?

புரசைவாக்கத்திலிருந்து முதல் கனவு

அரிச்சந்திரா படத்தின் மூலம் பால்கே அடைந்த புகழைப் பார்த்து, மவுனப் படத்தயாரிப்பில் ஈடுபடச் செல்வந்தர்கள் பலர் முன்வந்தார்கள். அன்றைய மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆர்.நடராஜ முதலியாருக்கும் அப்படியொரு ஆசை உண்டானது. அமெரிக்காவில் தயாராகும் மோட்டார் கார்களையும் அவற்றுக்கான வாகன உதிரிப்பாகங்களையும் ‘ரோமர் டான் & கம்பெனி’ என்ற பெயரில் வியாபாரம் செய்துவந்த இவர், தனது அலுவலகம் இயங்கிவந்த புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையை 1915-ம் ஆண்டு விலைக்கு வாங்கினார். அதையே ஸ்டூடியோவாக மாற்றி அமைத்தார். அதற்கு ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்று பெயரும் சூட்டினார். பிறகு சினிமா கேமரா வேண்டுமே? கேமரா வாங்க கல்கத்தா செல்லும் முன் சினிமா கேமராவை இயக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

சென்னை ஆர்வலர்களுக்கு ஏவிஎம் ஸ்டூடியோவை சுற்றிக் காட்டும் மோகன் வி ராம்
சென்னை ஆர்வலர்களுக்கு ஏவிஎம் ஸ்டூடியோவை சுற்றிக் காட்டும் மோகன் வி ராம்

முதலியாரின் அதிர்ஷ்டமோ என்னவோ, அவர் நினைத்த நேரத்தில் கர்சன் பிரபுவைப் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிக்க மதராஸ் வந்திருந்தது இங்கிலாந்து படக்குழு ஒன்று. அந்தக் குழுவின் கேமராமேன் ஸ்டீவர்ட் ஸ்மீத்தை அழைத்து வந்து தனது ஸ்டூடியோவைக் காட்டினார் முதலியார். அவரது குழுவுக்கு ஆவணப்படமெடுக்க மூன்று கார்களையும் கொடுத்து உதவினார்.
அன்று முதலியார் விற்றுவந்த ஒரு காரின் விலை பிரிட்டிஷ் இந்தியப் பணத்துக்கு வெறும் ஆயிரம் ரூபாய். முதலியாரின் உதவியில் நெகிழ்ந்த ஸ்டீவர்ட் அவருக்குச் சினிமா கேமராவை இயக்கக் கற்றுக்கொடுத்தார். கூடவே மைக்கேல் ஓமலேவ் என்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

37 நாட்கள் 50 ஆயிரம் வசூல்

கல்கத்தா சென்று கேமரா வாங்கி வந்த முதலியார், உடனடியாக ‘கீசக வதம்’ என்ற மகாபாரதக் கிளைக் கதையைத் தேர்வுசெய்து, படத் தயாரிப்பில் இறங்கினார். கதை எழுதி, காட்சிகளை அமைத்து மட்டுமல்ல, நடிகர்களை இயக்கியது, கேமராவை இயக்கியது, எடிட் செய்தது, உட்பட மவுனப் படக் காலத் தமிழ்சினிமாவின் முதல் டி.ராஜேந்தர் அவர்தான். 37 நாட்களில் 6 ஆயிரம் அடிகள் படம் எடுத்து முடித்ததும், சும்மா பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருக்க ஒரு வெற்றிகரமான மோட்டார் வியாபாரியால் முடியுமா என்ன? மவுனப் படம் என்பதால் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் வசனம் அப்போது டைட்டில்களாக எழுதப்பட்டு ஆப்டிகல் முறையில் சேர்க்கப்ப்டும்.

‘கீசக வதம்’, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வசன டைட்டில்களுடன் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்கான இந்தி டைட்டில்களை எழுதியவர் காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி என்ற ஆச்சரியமான தகவலும் கிடைக்கிறது. இதைவிட ஆச்சரியம் கடல் கடந்து வெளிநாட்டு மார்க்கெட்டைச் சந்தித்தது தமிழின் முதல் மவுனப் படம். ஆமாம்! பர்மா, மலேயா, பினாங்கு ஆகிய இடங்களில் திரையிடப்பட்டது. 35 ஆயிரம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் முதலியாருக்கு 15 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. அதாவது ‘கீசக வத’த்தின் மொத்த வசூல் 50 ஆயிரம்.

இதன் பிறகு வரிசையாகப் புராணக் கதைகளை படமாக எடுத்துக் குவித்தார் முதலியார். சினிமா தொழில் அவருக்குக் கொட்டிக்கொடுத்தது. ஆனால் எதிர்பாராமல் அவரது மில்லர்ஸ் சாலை ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் அவரது ஒரே மகன் அகால மரணமடைந்தார். இதனால் சினிமாவையே வெறுத்தார் தமிழ் சினிமாவின் முதல் தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான முதலியார் ஸ்டூடியோவை விற்றுவிட்டு அந்தத் தொழிலிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் சினிமாவுக்குத் திரும்பவே இல்லை.

மதராஸைப் புரட்டிப்போட்ட பேசும்படம்

மதராஸின் முதல் சினிமா தியேட்டர் எது என்பதில் இன்னும் சர்ச்சை இருந்தாலும், மவுனப் படங்களுக்கான முதல் திரையரங்கைக் கட்டியதாகச் சொல்லப்படும் வெங்கையா சினிமா தயாரிக்க முன்வந்தார். இதற்காகத் தனது மகன் பிரகாஷ் என்பவரை லண்டனுக்கு அனுப்பி ‘ கினிமட்டோகிராஃப்’ படித்துவரச் செய்தார். வந்தவேகத்தில் சென்னை புரசைவாக்கத்தில் தனது அப்பாவின் ‘ஸ்டார் ஆப் தி ஈஸ்ட்’ பிலிம் கம்பெனிக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஸ்டூடியோ அமைத்தார். இந்த ஸ்டூடியோவின் பரப்பளவு 600 ஏக்கர். இங்கே பல வெற்றிப்படங்கள் தயாராகின.

இந்தக் காலகட்டத்தில் மவுனப் படங்களின் யுகம் முடிந்து பேசும் படக் காலத்தைத் தொடங்கி வைத்த ‘காளிதாஸ்’ திரைப்படம்’ இம்பீரியல் மூவி டோன் ஸ்டூடியோவில் தயாரானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் முதல் படம் காளிதாஸ்தான். படத்தை இயக்கியவர் எச்.எம். ரெட்டி.

1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி, இன்று முருகன் தியேட்டராக இருக்கும் ‘சினிமா சென்ட்ரல்’ தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்துக்காகப் பொது இடங்களில் வைக்கப்பட்ட தட்டி விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முதல் தமிழ் பேசும் படத்தைக் காண, ரசிகர்கள் வெளியூர்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக வர, சினிமா சென்ட்ரலில் பிரிட்டிஷ் போலீசாரின் பாரா போடப்பட்டது. இந்தப் படத்தில் பூசாரியாக நடித்த எல்.வி.பிரசாத், பின்னாளில் கோடம்பாக்கத்தின் மிகப் பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான பிரசாத் ஸ்டூடியோவைக் கட்டியவர்.
பிறகு கோடம்பாக்கத்தின் பக்கத்து வீடாகிய கீழ்ப்பாக்கத்தில் 1934-ம் ஆண்டு ‘ஸ்ரீனிவாசா சினிடோன்’ என்ற ஸ்டூடியோவைத் தொடங்கினார் நாராயணன். 

தமிழின் முதல் பேசும் படம் என்று கூறப்படும் ‘னிவாச கல்யாணம்’ படமாக்கப்பட்டதும் இங்கேதான். இங்கே 100க்கும் அதிகமான தெலுங்கு, கன்னடம், மலையாளப் பேசும் படங்கள் படமாக்கப்பட்டன. இதனால் தென்னிந்தியாவில் அன்று பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் பலரும் மதராஸில் ஜாகை செய்தார்கள்.

முதலில் காரைக்குடியில் இயங்கிவந்த தனது ஸ்டூடியோவை 1948-ல் வடபழனிக்கு மாற்றினார் ஏ.வி.எம் செட்டியார். பிறகு பி.என். ரெட்டி தொடங்கிய வாகினி ஸ்டூடியோவும் அருகிலேயே அமைய, எல்லீஸ்.ஆர். டங்கன் அதிகப் படங்களை இயக்கிய மூவிடோன் ஸ்டூடியோ கிண்டியில் அமைந்தது. இப்படிக் கோடம்பாக்கத்தைச் சுற்றி உருவான 28 ஸ்டுடியோக்களில் இன்று எஞ்சியிருப்பது ஏ.வி.எம்., பிரசாத் ஸ்டுடியோ உட்பட ஒரு சிலவற்றின் உள்ள சில தளங்கள் மட்டும்தான்.

கோடம்பாக்கம் கனவுத் தொழிற்சாலை என்பதற்கு அடையாளமாக இன்று அங்கே ஒரு திரையரங்கு கூட இல்லை. 

கோடம்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான், ஜெயம் ரவி போன்ற பிரபலங்கள் குடியிருப்பதால் தனக்கும் திரைக்குமான உறவை இன்னும் இழக்காமால் இருக்கிறது குதிரைகளின் தயவால் உருவான கோடம்பாக்கம்.

இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014

No comments:

Post a Comment