சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எதிரே உள்ள சென்னை அரசுப் பொது மருத்துவமனை, ஏராளமான வரலாற்று நினைவுகளையும், மருத்துவத் துறையின் பல சாதனைகளையும் உள்ளடக்கியது. புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், ஆங்கிலேய படைவீரர்களுக்காக 1664 நவம்பர் 16-ல் தொடங்கப்பட்ட மருத்துவமனை இது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவர், கோட்டைக்குள்ளேயே மற்றொரு இடத்துக்கு, இந்த மருத்துவ மனையை மாற்றினார். 1772-ல்தான் இந்த மருத்துவமனை தற்போது இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த மருத்துவமனையின் வளாகத்துக்குள், 1835-ல் ஒரு மருத்துவப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. 1850-ல் இது மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண் டாவது மருத்துவக் கல்லூரி என்ற பெருமை இதற்கு உண்டு. முதலில் ஆங்கிலேயர்களுக்கு மட்டும் மருத்துவம் என்ற நிலை மாறி, 1842 முதல் இந்திய நோயாளிகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேரி ஆன் டாகம்ப் ஷார்லீப் என்ற பெண் இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அதன் பின்னர், மிசஸ் ஒயிட், பீலே மற்றும் மிஷேல் ஆகிய மூன்று ஆங்கிலோ - இந்தியப் பெண்களும் இந்தக் கல்லூரியில் மருத்துவம் பயின்றனர். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி பயின்றதும் இங்குதான்.
1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உடல் கொண்டுவரப்பட்டது இந்த மருத்துவ மனைக்குத்தான். அந்த நினைவாக, 2011-ல் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை என்று பெயர் மாற்றப்பட்டது.
இங்கு சுமார் 3,000 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். புற நோயாளிகள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10,000 முதல் 12,000 வரை. மருத்துவமனையில் 52 அறுவைக் கூடங்கள் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மட்டும் மொத்தம் 213 படுக்கைகள் உள்ளன. உறுப்பு மாற்று சிகிச்சையில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தை வகிக்கிறது இந்த மருத்துவமனை.
சென்னை மத்திய சிறைச்சாலையின் அனைத்துப் பிரிவுகளும் புழல் சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்ட பிறகு பழைய மத்திய சிறைச்சாலை இடிக்கப்பட்டு அந்த இடம் மருத்துவக் கல்லூரியின் விரிவாக்கத்துக்காக அளிக்கப்பட்டது.
3,25,000 சதுர அடி பரப்பளவில் 6 அடுக்கு மாடிகட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு 1,250 மாணவர்கள், 400 ஆசிரியர்களுக்கு போதிய இட வசதி கொண்டிருக்குமாம். இன்றைக்கும் தமிழகத்தில் அரசு மருத்துவமனை என்றால் அதை மரியாதையாகப் பார்க்க வைக்கும் மருத்துவமனை களில் முன் வரிசையில் உள்ள மருத்துவமனை இது.
No comments:
Post a Comment