குரோம்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி, 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் கொண்ட கண்காட்சியை கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா வெள்ளிக்கிழமை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாசன், விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் கொண்ட கண்காட்சியை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகில் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தங்கம், வெள்ளி, செம்பு,பித்தளை, சந்தனம், தேக்கு, கண்ணாடி, பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்ட பல்வேறு சிறிய, பெரிய விநாயகர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ரயில் ஓட்டும் விநாயகர், குளத்தில் மீன் பிடித்து விளையாடும் விநாயகர், கேரம் விளையாடும் விநாயகர், பூங்காவில் சறுக்கி விளையாடும் விநாயகர், சிங்கம், புலி, குதிரை மீது சவாரி செய்யும் விநாயகர்,டாக்டர், வக்கீல் ஆகிய வடிவங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் உள்ள விநாயகர் சிலைகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள விநாயகர் கோயில்கள் குறித்த விவரங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.தன்சிங், தாமஸ்மலை ஒன்றியத் தலைவர் என்.சி.கிருஷ்ணன், பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் நிசார் அகமது, துணைத் தலைவர் டி.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி 30-08-2014
No comments:
Post a Comment