இரவின் கவின்மிகு இருட்டும், நெஞ்சைத் தொட்டு வருடும் இரவின் குளுமையும் கொண்ட அந்த இரவு வாரக் கடைசி நாள் என்று குதூகலமாக வரவேற்க்கப்படும் வெள்ளியன்று பல்வேறு இசையுடன் தொடங்கியபோது முதிர் மாலை ஏழு மணி.
சென்னை ஐஐடி வளாகத்தில் `ஸ்பிக் மெகே` தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த இரவு பாரம்பரிய சங்கீத கனமழை பொழிந்தது.
விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பண்டிட் பத்மஸ்ரீ பிர்ஜு மஹாராஜ் வழங்கிய கதக் நடன நிகழ்ச்சி, சிவகுமார் ஷர்மாவின் சந்தூர் இசை, எல்.சுப்ரமணியம் மற்றும் அம்பி சுப்ரமணியம் வழங்கிய வயலின் இசை, எஃப். வாசிஃபுதின்
தாகரின் த்ருபத் இசை, பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் கர்நாடக இசை ஆகியவை இடம் பெற்று சங்கீத வெள்ளத்தை ஏற்படுத்தியது.
ரசிகர்களாக அரங்கத்தில் எங்கு நோக்கினும் இளைஞர்கள், இளைஞர்கள் மேலும் இளைஞர்கள்.
இளைஞர்கள் இடத்திற்கு இசையையும் பாரம்பரிய கலைகளையும் கொண்டு சென்றால் அவர்கள் காட்டும் ஆர்வம் அளப்பறியது என்பதை நிரூபித்தது இந்த இரவு நிகழ்ச்சி.
இதனை ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் சிறப்புற நிகழ்ந்தேற வைத்தது `ஸ்பிக் மெகே` என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
இந்நிறுவனத்தை 37 ஆண்டுகளுக்கு முன்னர் முனைவர் கிரண் சேத் என்ற முன்னாள் ஐஐடி மாணவரைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இவர் அறுபதுகளில் ஐஐடி கரக்பூரில் படித்து விட்டு, மேற்படிப்புக்காக அமெரிக்க நகரான கொலம்பியா சென்றுவிட்டார்.
அங்கு அவருக்குத் த்ருபத் இசையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்நாளில் அவருக்கு த்ருபத் இசை என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்ததாம்.
ஆனாலும் அந்நிகழ்ச்சிக்குச் சென்றார். அந்த அனுபவத்தை ”இந்நிகழ்ச்சிக்குச் செல்லும்போது தரையில் கால் பதித்து நடந்தேன். இசையைக் கேட்டுவிட்டு திரும்பும்போது, தரைக்கு ஒரு அடி மேலே மிதப்பது போல இருந்தது“ என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே ஒரு மைல் தூரத்திற்கும் குறைவான இடைவெளியில் வெவ்வேறு பாரம்பரியத்தை கலை, உணவு, கலாசாரம் என காட்டி நிற்கிறது இந்தியா.
இந்தியாவின் மிகப் பெரிய சொத்தே இந்த பாரம்பரியக் கலைகள்தான் என்பதைப் புரிந்து கொண்ட அவர், உன்னதமான இக்கலைகள் முறையான பயிற்சி பெற்றவர்கள் மூலம் மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்டார்.
அதன் விளைவுதான் `ஸ்பிக் மாகெ‘ என்ற ( SPIC MACAY - Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth ) தன்னார்வத் தொண்டு நிறுவனம் தோன்றக் காரணமானது. இத்தகைய மிகச் சிறந்த கலைப் பாரம்பரியத்தைத் தோற்றுவித்து வளர்த்த முன்னோர்களுக்கு வந்தனம் தெரிவிக்கும் வண்ணம் இசை, நாட்டியம் ஆகிய விழா நிகழ்ச்சிகள் இந்நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 7000 நிகழ்ச்சிகளில் ஆயிரம் நிகழ்ச்சிகள் அரசு பள்ளிகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் கிரண் சேத், இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் ராஜீவ் காந்தி தேசிய சத்பாவனா விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
இந்த இரவு இசை நிகழ்ச்சியில் கண்டதும், கேட்டதும்:
கதக்: பண்டிட் பத்மஸ்ரீ பிர்ஜு மஹாராஜ்
கதக் என்றால் நடனத்தின் மூலம் கதை சொல்வது. பிரபலமான புராண, இதிகாச கதைகளை கை அசைவுகள் கண் அசைவுகள் மூலம் ரசிகர்களுக்கு புரிய வைப்பது இக்கலையின் முக்கிய அம்சம்.
இது வட இந்தியாவில் உருவான எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் முக்கியமானதாகும். நாடோடிப் பாணர்களுடன் தொடர்பு கொண்டிருந்த இக்கலை கிராம மையப்பகுதிகள் மற்றும் கோவில் முற்றங்களில் பாணர்களால் நடத்தப்பட்டது.
கதைகளை புரிய வைப்பதற்காக, இசைக் கருவியொலி, வாய்ப்பாட்டு, கால் சதங்கை ஒலி ஆகியவற்றுடன் புது நடையிலான கை அசைவுகளைப் பாவனையாகப் பயன்படுத்துவார்கள்.
அரங்கம் முழுவதும் சுற்றிச் சுழன்று ஆடி, தாள கதியுடன் ஒன்றி ஆடுவார்கள். தபலாவின் தாளம் `சாம்` என்று நிறுத்தப்படும் கணமும், நாட்டிய மணியின் நடன நிறுத்தக் கணமும் ஒரே நேரத்தில் நிகழ்வது ரசிகர்களை பரவசமூட்டும்.
இக்கதக் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் இரவு ஏழு மணிக்குத் பிர்ஜு மஹராஜ் (விஸ்வரூபம் படத்தில் கமலஹாசனுக்கு கதக் நாட்டிய வடிவமைப்பைச் செய்தவர்) தலைமையில், கதக் குழுவினருடன் தொடங்கியது.
தாளக் கட்டும், நடனமும் இணையும் முறையை, தபலா இசையுடன் நிகழ்த்திக் காட்டினார் பிர்ஜு மகராஜ். இதில் இந்தியில் பதினைந்து வரை எண்ணிக் காட்டி அதனை தாளக் கட்டுடன் இணையாக ஆடிக் காட்டியபடியே ஒரே நேரத்தில் சட்டென்று நிறுத்திக் காட்டினர் குழுவினர்
அனைவரும். கைத்தட்டல் விண்ணை முட்டியது.
இளைஞர் கூட்டமல்லவா கைத்தட்டலில் பலம் அதிகமாக இருந்தது. கதக் மூலம் வாலிபால் மற்றும் ஹாக்கி ஆடினார்கள்.
உலக நிகழ்வுகள் அனைத்தையுமே நடனத்துள் அடக்கிவிடலாம் என்று நிகழ்த்திக் காட்டினார்கள். அகல்யை சாப விமோசனம் தத்ரூபமாக இருந்தது.
இப்புராணக் கதையை புரிந்து கொண்டதை அறிவுறுத்தும் வகையில் இளைஞர்கள் கரகோஷம் பல நிமிடங்களுக்கு இடைவிடாமல் ஒலித்து காதைப் பிளந்தது.
அடுத்து வந்தது ஜுகல் பந்தி இதில் பிர்ஜுவும் அவரது மாணவி சாஸ்வதி சென்னும் இணைந்து ஆடினார்கள். ஆடவரான பிர்ஜுவின் நடனத்தில் நளினம் மீதூறியது போற்றத்தக்கதாக இருந்தது.
சந்தூர்: சிவகுமார் ஷர்மா
சந்தூர் இசைக் கருவி வீணை இசைக் கருவி குடும்பத்தைச் சேர்ந்தது. நூறு தந்திகளைக் கொண்ட இக்கருவி சத தந்தி வீணை என்றும் அழைக்கப்படுகிறது. தபலாவுடன் தனி இசை கச்சேரி வழங்கினார் பண்டிட் சிவகுமார் சர்மா. முதலில் வந்தது பாகேஸ்வரி ராக ஆலாபனை. அவர் வாசிக்க வாசிக்க சின்ன சின்ன கிரிஸ்டல் கல்கண்டுகளை மழையாக மனதுள் பொழிந்தது போல் இருந்தது.
இதமாக நெஞ்சை வருடும் தபலா அமெரிக்கை. நடுநிசியில் வந்த இந்த நல்ல இசையை ரசிகர்கள் கிறங்கிப் போய் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நடு நிசியானதால் பூ மலரும் ஓசை கூடக் கேட்டு விடுமோ என்று பூ மரமும் அதன் மொட்டுக்களும் அசையாமல் இருந்தது.
இளைஞர்கள் கூட்டமல்லவா?
ஒரு இருமல், கணைப்புக் கூட இல்லை. ஐநூறு பேர் சுற்றி அமர்ந்து தேவ லோக அமைதி காத்து, இந்த இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு இசையின்பால் மேலும் கிளர்ச்சியைத் தூண்டியது.
எழுதா ஓவியம் போல் அசையாமல், மகுடி கேட்ட நாகம் போல் அமர்ந்திருந்த ரசிகர்களின் சபை நாகரிகம் அற்புதம்.
வயலின்: எல்.சுப்ரமணியம்
ஐரோப்பியர்களால் பதினாறாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வயலின், எட்டயபுர சம்ஸ்தான வித்வானான பாலசுவாமி தீட்சதர் என்பவரால் கர்நாடக இசை உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டதாம்.
கர்நாடக வாய்பாட்டு இசைக்கு தவிர்க்க முடியாத பக்கவாத்தியமாக இன்றும் வயலின் கொண்டாடப்படுகிறது என்பதுதான் உண்மை.
வயலின் வித்வான் எல்.சுப்ரமணியம், மோகன ராகத்தை எடுத்துக் கொண்டார். விறுவிறுப்பும் வேகமுமாக வில் பேசியது.
எல்.சுப்ரமணியமும், அம்பி சுப்ரமணியமும் மாற்றி மாற்றி வேகம் கூட்டி வாசித்தது புதுமையான உணர்வை தந்தது.
இதில் அம்பியின் இளமை வேகம், அவரது தந்தையின் அனுபவத்திற்கு சவால்விட்டது.
நடுநிசி தாண்டி கருக் `கும்` இரவில், தனி ஆவர்த்தனம் கேட்டது, மொறு மொறு சிப்ஸ் சாப்பிட்டது போல்
`ஃப்ரஷ்ஷாக` இருந்தது.
கச்சேரியில் அருகில் அமர்த்திக் கொண்டு இசையைக் குழைத்து குழைத்து அம்பிக்கு ஊட்டினார் தந்தை சுப்ரமணியம்.
அப்போது இரவு இரண்டு மணி தூங்கி விடாமல், விழிப்பாய் பிடித்துக் கொண்டார் அம்பி வில்லில்.
த்ருபத்: எஃப். வாசிஃபுதின் தாகர்
கர்நாடக சங்கீதத்தில் இருந்து கிளைத்ததுதான் ஹிந்துஸ்தானி த்ருபத். ஹிந்துஸ்தானி வாய்பாட்டாக த்ருபத் இசையை இன்னும் விடியாத காலையில் மூன்று மணிக்கு தர்பார் ராகத்தில் தொடங்கினார் எஃப். வாசிஃபுதின் தாகர்.
இந்த நேரத்திலும் குரல் கரகரக்காமல் வளமாய் இருந்தது இனிமையைக் கூட்டியது. ராக ஆலாபனை கூட ரிதத்திற்கு கட்டுப்பட்டதுதான் என்ற ஒரு புதுமைச் செய்தியைக் கூறிய அவர், ரசிகர்களை ரிதமாக கைத்தட்டச் சொன்னார்.
அந்த ரிதத்திற்கு ஆலாப்ஸ் பாடி அழகாய் நிறுத்தினார். இந்தக் கச்சேரியில் ரசிகர்களும் இணைந்து விட்டதால் ராகம் தர்பார், அரசவை தர்பாராக மிளிர்ந்தது.
ஆலாப்ஸ்க்கு நடுவில் இருக்கும் அமைதியும் இசையே என்ற அவர், விஷ்ணு முராரி திருபுவன என்று பாடி முடித்தபோது காலை ஐந்து மணி.
கர்நாடக வாய்பாட்டு: டி.எம்.கிருஷ்ணா
மும்மூர்த்திகளின் கிருதிகளை பெருமளவு கொண்ட கர்நாடக இசை அனாதியானது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இதனை டி.எம். கிருஷ்ணா குரலில் பாடக் கேட்டது அலாதியானது.
ராகமாலிகை கிருதிக்கு, ஸ்ரீராகம் உட்பட நான்கு ராகத்திற்கும் சின்னச் சின்னதாக ஆலாபனை செய்தபோது, விடிந்தும் விடியாத காலை 5.30 மணி.
இந்த இரவெல்லாம் இசை வெள்ளத்தில் தோய்ந்திருந்த காதுகள், மேலும் இசையை விழுங்க விடைத்து நிமிர்ந்தன.
ராகங்களுடன் தொந்த யுத்தம் செய்யாமல் பணிந்து கொஞ்சுகிறார் கிருஷ்ணா.
அரங்கம் முழுவதும் அவர் அனுப்பிய ராக தேவதைகள் உலா
வந்தபோது, காலை ரம்மியமாக விடிந்தது.
டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசையின் விடிவெள்ளி.
ஒரு யுகம் முழுவதும் இசைபட வாழ்ந்தாற்போல் இருந்தது.
இனி இப்படியொரு வாய்ப்பு எப்போது கிடைக்கப் போகிறது? ஹூம்…
No comments:
Post a Comment