சென்னை மாநகரப் பகுதியில் வரலாறு காணாத வகையில் 16 செ.மீ. மழை கொட்டியுள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகள், சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் தமிழகத்தின் உள் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணி அளவில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை நேரம் ஆகஆக வலுத்தது. விடிய விடிய அடைமழையாகப் பெய்தது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழைநீர் அகற்றும் பணி
விடாது மழை கொட்டுவதால் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. ரயில்வே, சாலை சுரங்கப் பாதைகளில் மழைநீர் புகுந்தது. இதனால் நேற்று காலை போக்குவரத்து முடங்கியது. தேங்கிய மழை நீரை லாரிகள், நீர் இரைக்கும் இயந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். எழும்பூர் மாநிலப் பள்ளி அருகே உள்ள சுரங்கப் பாதையில் மழைநீர் அதிக அளவில் நிரம்பியுள்ளதால், நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
பிளாஸ்டிக் பைகளால் அடைப்பு
பலத்த மழையால் மாநகரப் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் பிளாஸ்டிக் கேரிபேக், தெர்மோகூல் போன்றவை அடைத்துக்கொண்டதால் மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியது. கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் ஏற்பட்ட அடைப்பு, பொக்லைன் உதவியுடன் நீக்கப்பட்டது.
அவ்வாறு நீக்கப்பட்ட பிளாஸ்டிக், தெர்மோகூல் குப்பைகள், லாரியில் 7 லோடு அளவில் அகற்றப்பட்டன. பல பகுதிகளில் கால்வாயில் இருந்த புதர்கள் அகற்றப்படாததாலும் அடைப்பு ஏற்பட்டது. மழையால் மாநகரப் பகுதியில் 33 மரங்கள் விழுந்தன. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.
மாநகராட்சி நடவடிக்கை
மழை பாதிப்புகளை சரிசெய்யும் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் கூறியதாவது: எதிர்பாராத அளவுக்கு மழை கொட்டியுள்ளது. ஒரு நாளில் 16 செ.மீ. என்பது சென்னை சந்தித்திராத மழை அளவு. பல சாலைகள், 12 சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை சரிசெய்துவிட்டோம்.
வரலாறு காணாத மழை என்பதால், அதிகப்படியான மழைநீர், கால்வாய்கள் மூலமாகத் தான் வடியவேண்டும். பல வாய்க் கால்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைப்பை ஏற்படுத்தின. அவற்றை அகற்றி, நீரை வெளியேறச் செய்து வருகிறோம். பிளாஸ்டிக் குப்பைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். விதிகளை பின்பற்றாமல் பிளாஸ்டிக் குப்பைகள் வெளியில் வீசப்படுகின்றன. இதனால் மழைநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு, நீர் வடிவதில் சிரமம் ஏற்படுகிறது.
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால்கள் அனைத்திலும் ஆகாயத்தாமரை செடிகள், புற்கள், புதர்களை மழைக்கு முன்பாகவே அகற்றிவிட்டோம். மாநகராட்சி பகுதியில் சில வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதை அவர்கள்தான் அகற்றவேண்டும்.
இவ்வாறு விக்ரம் கபூர் கூறினார்.
தி இந்து:திங்கள், அக்டோபர் 20, 2014
No comments:
Post a Comment