சென்னையில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போல், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.

கன மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி, கே.கே.நகர், குரோம்பேட்டை, பம்மல், மவுன்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே கன மழை பெய்து வருகிறது.
பல பகுதிகளில் மழை நேர் தேங்கி இருப்பதால் பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்லும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

சென்னையில் கனமழையால் சாலைகளைச் சூழந்துள்ள வெள்ளம். | படம்: கே.வீ.ஸ்ரீனிவாசன்


தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ஷாப்பிங் ஏரியாக்களுக்கு செல்ல முடியாமல் முடங்கியிருக்க வேண்டியிருப்பதாக இல்லத்தரசிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு வியாபாரம் மந்தமாக உள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நேரம் என்பதால் ஆட்டோக்காரர்கள் கூடுதல் பணம் கேட்டும், மீட்டர் இயக்க மறுத்தும் பயணிகளை பெரும் அவதிக்குள்ளாக்கினர்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால், மழை மேலும் 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் இயக்குநர் ரமணன் கூறுகையில், "தமிழகத்தில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும். சென்னையைப் பொருத்த வரை அநேக இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பலத்த மழையும் பெய்யும்" என தெரிவித்துள்ளார்.
தி இந்து:திங்கள், அக்டோபர் 20, 2014