தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் உள்பகுதிகளில் பல இடங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக லேசான தூரல் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பல இடங்களில் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் வானில் மேகம் சூழ்ந்திருந்ததால், பகல் பொழுது குறைவான வெளிச்சத்துடன் காணப்பட்டது. அதனால் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

மழை குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தெலங்கானா, வடக்கு உள் கர்நாடகம் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும்.

மேலும் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தமிழகத்தின் உள் பகுதியில் மேலடுக்கு சுழற்சியும் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் உள் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் மழை தரும் மேகங்கள் சூழ்ந்திருப்பதையும் காண முடிகிறது. இதை வடகிழக்கு பருவ மழையின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சாத்தி யக்கூறுகள் தென்படுகின்றன.

வழக்கமாக அக்டோபர் 20 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டும் காலத்தோடு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. எனவே அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அப்போது முறைப்படி அறிவிக்கப்படும் என்றனர்.

தி இந்து:சனி, அக்டோபர் 18, 2014