Saturday, August 23, 2014

அன்றைய சென்னை: சென்னை மத்திய சிறை



இந்தியாவின் பழமையான சிறைகளில் ஒன்று சென்னை மத்திய சிறை. 172 ஆண்டுகளுக்கு முன்பு, 1837-ம் ஆண்டு 9 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 2,500 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்டதாக இந்த சிறை இருந்தது. தொடக்கத்தில் மதறாஸ் சிறை என்றழைக்கப்பட்ட இந்த சிறை, 1855-ல்தான் மத்திய சிறை என்று மாற்றப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுபாஷ் சந்திரபோஸ் முதல் வீர சாவர்க்கர் வரை இந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் சிறையிலேயே உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. இந்த சிறையில் இருந்தபோது, தனக்கு விலை உயர்ந்த தேநீர் வழங்க வேண்டும் என்று கேட்பாராம் சுபாஷ் சந்திரபோஸ்.

ஆடம்பரத்துக்காக இல்லை; ஆங்கிலேயர்களுக்குச் செலவு வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிச் செய்வாராம். இங்கு சிறைவைக்கப்பட்ட அறிஞர் அண்ணா பிற்காலத்தில் சொன்னார், “சிறைச்சாலை ஒரு சிந்தனைக் கூடம்!”

மிகவும் பழமையாகிவிட்டதாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாலும் இந்த சிறையை இடித்துவிட அரசு முடிவுசெய்தது. அதன்படி, 2006-ம் ஆண்டு மத்திய சிறைச்சாலை மூடப்பட்டது.

சென்னையை அடுத்துள்ள புழலில், 220 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மத்திய சிறைக்குக் கைதிகள் மாற்றப்பட்டனர்.

2009-ல் அதை இடிக்கும் பணி தொடங்கியது. முற்றிலுமாக இடிக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு, செயல்படத் தொடங்கியது.

இனிமேல் பழைய மத்திய சிறையைத் திரைப்படங்களில்தான் பார்க்க முடியும்.

இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014

காணாமல் போனவை

மாட்டு வண்டியில் உற்சவர்: ஹிண்டு சாரியட் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் உள்ள வாகனம், அநேகமாகக் கோயில் உற்சவ மூர்த்திகளின் ஊர்வலமாக இருக்க வேண்டும்.
மாட்டு வண்டியில் உற்சவர்: ஹிண்டு சாரியட் என்று ஆங்கிலத்தில் 

குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் உள்ள வாகனம், அநேகமாகக் 

கோயில் உற்சவ மூர்த்திகளின் ஊர்வல மாக இருக்க வேண்டும்.

ஒரு வருஷம் கழித்து நம் சொந்த ஊருக்குத் திரும்பினாலே, அந்தப் பகுதியின் அடையாளச் சின்னமாக இருந்த மரமோ, கட்டிடமோ, சாலையின் ஒரு பகுதியோ காணாமல் போய், வெறிச்சென்று இருக்கும். வழி தெரியாமல் முழிப்போம்.
தப்பித்த பழம் பெருமை: தற்போது ராஜாஜி ஹால் என்றழைக்கப்படும் இந்த அரங்கம் 1800களில் கட்டப்பட்டது. பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான விருந்து அரங்காக (Banqueting Hall) இது இருந்திருக்கிறது. தற்போது பல்நோக்கு மருத்துவமனை (புது சட்டப்பேரவை) அமைந்திருக்கும் புதிய வளாகம் கட்டப்பட்டபோது, இந்தக் கட்டிடம் இடிக்கப்படாமல் தப்பித்துவிட்டது.
தப்பித்த பழம் பெருமை: தற்போது ராஜாஜி ஹால் என்றழைக்கப்படும் இந்த அரங்கம் 1800களில் கட்டப்பட்டது. பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான விருந்து அரங்காக (Banqueting Hall) இது இருந்திருக்கிறது. தற்போது பல்நோக்கு மருத்துவமனை (புது சட்டப்பேரவை) அமைந்திருக்கும் புதிய வளாகம் கட்டப்பட்டபோது, இந்தக் கட்டிடம் இடிக்கப்படாமல் தப்பித்துவிட்டது.

ஆனால், இன்றைக்குப் பெருநகராக மாறிவிட்ட சென்னை போன்ற ஊரில் கால் பதிக்கும்போது, இப்படி ஆச்சரியம் ஏற்படுத்தும் தருணங் களை நிச்சயம் எண்ண முடியாது.
அன்றைய ஆட்டோ!: ஜட்கா என்று அழைக்கப்பட்ட இந்தக் குதிரை வண்டி, இன்றைய ஆட்டோக்களைப் போல அந்தக் காலச் சென்னையில் போக்குவரத்துக்குப் பயன்பட்ட வாகனம். கறுப்பு வெள்ளைப் படத்தில் வண்ணம் சேர்க்கப்பட்ட படம் இது.
அன்றைய ஆட்டோ!: ஜட்கா என்று அழைக்கப்பட்ட இந்தக் குதிரை வண்டி, இன்றைய ஆட்டோக்களைப் போல அந்தக் காலச் சென்னையில் போக்குவரத்துக்குப் பயன்பட்ட வாகனம். கறுப்பு வெள்ளைப் படத்தில் வண்ணம் சேர்க்கப்பட்ட படம் இது.

சென்னை இப்படியெல்லாம் இருந்திருக்குமா என்று யோசிக்க வைக்கும் வகையில் பல கறுப்பு வெள்ளை படங்கள் வந்துவிட்டன. ஆனால், சென்னையைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியரும் அஞ்சல்தலை சேகரிப்பாளருமான த. முருகவேளிடம் இருக்கும் படங்கள், நமது ஆச்சரியத்தை மேலும் அதிகரிக்கின்றன.
குளத்தைக் காணோம்!: தற்போது பல்நோக்கு மருத்துவமனை வளாகமாகிவிட்ட, முந்தைய ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் காவல்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் இது. படத்தில் உள்ள குளம் இருந்த பகுதியில்தான், தற்போதைய எம்.எல்.ஏ. ஹாஸ்டல் அமைந்திருக்கிறது.
குளத்தைக் காணோம்!: தற்போது பல்நோக்கு மருத்துவமனை வளாகமாகிவிட்ட, முந்தைய ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் காவல்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் இது. படத்தில் உள்ள குளம் இருந்த பகுதியில்தான், தற்போதைய எம்.எல்.ஏ. ஹாஸ்டல் அமைந்திருக்கிறது.

காட்டுயிர், இயற்கை சார்ந்த அஞ்சல் தலைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கைக் கொண்ட இவர், அதற்காகத் தென்னிந்திய அளவில் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இங்கே இடம்பெற்றுள்ள படங்களை அஞ்சல் தலை சேகரிக்கும்போது, சேர்த்துச் சேகரித்திருக்கிறார்.


"நாம் வாழும் ஊரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால்தான் பிக்சர் போஸ்ட்கார்டுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் ஒரு ஊருக்குச் சுற்றுலா செல்லும்போது, அந்த ஊரின் முக்கியப் பகுதிகள், காட்சிகள், பழக்கவழக்கங்களைச் சொல்லும் கவர்ச்சிகரமான வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்புவது வழக்கம்.
வண்ண அச்சிடும் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில், கறுப்பு வெள்ளைப் படத்தின் மேலேயே வண்ணம் சேர்க்கப்பட்டதும் உண்டு. இந்தப் பிக்சர் போஸ்ட்கார்டுகளில், அஞ்சல் செய்யப்பட்டவை மிகவும் அரிது. இந்த இரண்டு வகைகளும் என்னிடம் இருக்கின்றன" என்கிறார் முருகவேள்

இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014

நம்ம சென்னை கெத்து.

சென்னை தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சென்னையும், அதன் மக்களும் எப்போதும் சுறுசுறுப்பானவர்கள். கல்வியிலும், வேலைகளிலும் நம்ம சென்னப் பட்டினம் அவுட் ஸ்டேண்டிங் ப்ளேஸ்தான். ஆகவே, வெவ்வேறு ஊர்களிலி ருந்தும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து வாழ்கின்றனர்.
சென்னைக்கு வந்துவிட்டால் இங்கு இருந்து வெளியே செல்லவே முடியாது. செல்லவே மனம் சம்மதிக்காது. சூடான காலநிலை, நெரிசலான ட்ராஃபிக், பரபரப்பாக ஓடும் மக்கள் என்பதுதான் சென்னை என இருந்தாலும் இந்த ஜூன், ஜூலை மாதங்கள் வந்த பின்னர் காலையில் அடிக்கும் வெயில் மாலையில் பெய்யும் மழை என அடிக்கடி நிறம் மாறும் நம்ம சென்னையைப் பார்த்தால், மகிழ்ச்சிதான்.


புரிந்துகொள்ள முடியாதது நம்ம சென்னை கெத்து. மழை பொழியும் பொழுது சென்னையின் அழகைச் சொல்ல முடியாது. ஃபீல் பண்ணிதான் பார்க்க வேண்டும்.

சென்னையில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும் மெரினா கடற்கரை எப்போதும் அனைவரின் முதல் விருப்பமாக உள்ளது. ஆனால் ஒடிசாவில் இருந்து வந்து சென்னையில் படிக்கும் மாணவன் ஆஷிஷ் ஜானுக்கோ கன்னிமாரா என்றால் உயிர். “எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று கன்னிமாரா நூலகம்.

சென்னையில் அப்படி ஒரு அமைதி வேறு எங்கே கிடைக்கும்? புத்தகங்களுடன் நிம்மதியாக பொழுதை உபயோகமாகக் கழிக்கலாம்” என்று கூறிய அவருக்கு சாந்தோம் தேவாலயம் பார்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

மாணவிகளின் ஓட்டு என்னவோ ஷாப்பிங் மால்களுக்குத்தான். நகரத்தில் இருக்கும் மால்களுக்கு நண்பர்களுடன் சென்று விண்டோ ஷாப்பிங் செய்து லைட்டாகச் சாப்பிட்டு செல்ஃபிகள் எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவதுதான் ஹேப்பி மொமெண்ட் என்று தெம்பாகக் கூறுகின்றனர்.
தூத்துக்குடியிலிருந்து வந்து நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் படிக்கும் மாணவி ஸ்ரீ ரஞ்சனிக்குச் சென்னை சொந்த வீடு போல் இருக்கிறது. அதனால்தான் அவர், “இந்தியாவில் பல நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாதபோது சென்னையில் அந்தப் பயம் இல்லை என்பது நல்ல விஷயம்.

பெங்களூர் டெல்லி போன்ற மெட்ரோக்களைக் காட்டிலும் சென்னை நகரம் அனைவருக்கும் வீடு போல உள்ளது. நடுத்தர வர்க்க மக்கள், கல்வி பயில வரும் மாணவர்கள் ஆகிய எல்லோராலும் இங்கே சமாளிக்க முடியும். மொத்தத்தில் சென்னை வாய்ப்புகளின் கூடம்” என்கிறார்.
சென்னை நகரத்தை முழுமையாக ஒரு ரவுண்டு போக வேண்டும் என்பது நகரத்தில் இருக்கும் டீன்-களின் ஒருமித்த விருப்பமாக உள்ளது. ‘‘நகரத்தினுள் வண்டி ஓட்டுவதுதான் த்ரில்லான அனுபவம், அதை மிஸ் பண்ணாதீங்க’’ என்று கூறும் கிருஷ்திகா பன்னீர்செல்வம் ஸ்ரீலங்காவிலிருந்து வந்திருக்கிறார். ‘ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆரில் வண்டி ஓட்டுவதும் குடும்பத்துடன் ஒரு நாள் பயணமாக மாமல்லபுரம் செல்வதும் அவ்வளவு அழகாக இருக்கும்’ என்று குதூகலிக்கிறார் அவர். ‘‘நெரிசலான ட்ராபிஃக்கில் மெரினா கடற்கரை ஓரம் உள்ள சாலைகளில் வண்டி ஓட்டுவதற்கு தில் வேணும்’’ என்று சொல்லும் அவர் சென்னையை வண்டியில் சுற்றிவந்ததுதான் தன்னுடைய பெஸ்ட் மொமெண்ட் என்றும் சொல்கிறார்.

“சென்னையைப் பார்த்தவுடன் பிடித்துப் போவது இல்லை. ஆனால் பழகப் பழக தான் பிடிக்கும்” என்று பஞ்ச் அடிக்கிறார் திருச்சியில் இருந்து வந்திருக்கும் மாணவி ஹரிணி. “என்னதான் நான் தமிழ்நாட்டிலேயே இருந்தாலும், சென்னை தமிழ் தனி ஸ்டைல். இங்க வந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். எலக்ட்ரிக் ட்ரெயின் டிராவல் ரொம்ப ஸ்பெஷல். மெட்ரோ எப்பொழுது வரும் என்று வெயிட் பண்றோம்” என்று ஆர்வத்துடன் சொல்கிறார்.

வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தாலும் சென்னை நகரத்துடனான பாசம் என்றும் குறையாது என்பதே இவர்கள் உணர்வு. சென்னையில் இருப்பதே கெத்துதான் என்று கூறி கோரஸாக ஹாப்பி பர்த்டே பாடினர் நம்ம சென்னை இளசுகள்.
இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014

சென்னையின் கட்டிடங்கள்: எஞ்சி நிற்கும் அற்புதங்கள்

  • சேப்பாக்கம் அரண்மனை
    சேப்பாக்கம் அரண்மனை
  • செனட் இல்லம்
    செனட் இல்லம்
  • விக்டோரியா பப்ளிக் ஹால்
    விக்டோரியா பப்ளிக் ஹால்
  • எழும்பூர் ரயில் நிலையத்தின் வேப்பேரி பகுதி வாசல்
    எழும்பூர் ரயில் நிலையத்தின் வேப்பேரி பகுதி வாசல்
சென்னை என்றவுடன் நம் மனதில் தோன்றும் சித்திரம், பழமையின் அடை யாளங்களாக எழுந்து நிற்கும் பிரம்மாண்ட சிவப்பு நிறக் கட்டிடங்கள்தான். பெரும்பாலும் இந்தோ சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களில் ஒரு சில மட்டுமே இன்றைக்கு எஞ்சியுள்ளன.

இவற்றுக்கு முந்தைய வரலாற்று எச்சங்களான அரண்மனைகளும் மற்ற கட்டிடங்களும் அநேகமாக அழிந்துவிட்ட நிலையில், வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களிலும் சிலவே எஞ்சியுள்ளன. 

முறையான பராமரிப்பில்லாததால், இவையும் அழிவை எதிர்நோக்கி உள்ளன. கட்டிடக் கலையில் விஞ்சி நிற்கும், சென்னையின் அப்படிப்பட்ட கட்டிடங்களில் சில:

சேப்பாக்கம் அரண்மனை

சென்னையைக் கடைசியாக அரசாண்ட ஆர்க்காடு நவாபுகளின் அரண்மனை இது, நம் கண் முன்னே அழிந்து வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததே காரணம்.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு பக்கவாட்டில் இருக்கும் சேப்பாக்கம் அரண்மனை என்றழைக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தை 1768-ல் கட்டியவர் பால் பென்ஃபீல்ட். 1870களில் ராபர்ட் சிஷ்ஹோம் விரிவுபடுத்தினார். காத்திக், இந்தோ சாரசெனிக் கட்டிடக் கலை பாணிகளின் கலவையாகக் கட்டப்பட்டது. வெள்ளைக்காரர்களின் கைகளுக்கு வந்த பிறகு வருவாய்த் துறை அலுவலகமாகச் செயல்பட்டது.

ஹுமாயுன் மகால், கால்சா மகால் என்று இரு வளாகங்கள் உண்டு. இங்கே படத்தில் இருப்பது கால்சா மகால். அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்துகளால் இதன் பெரும்பகுதி சமீபத்தில் இடிந்துவிட்டது.
செனட் இல்லம்
செனட் இல்லம்

புகழ்பெற்ற இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவரும் ராபர்ட் சிஷ்ஹோம்தான். ரோமானியக் கட்டிடக் கலையுடன் இந்தோ சாரசெனிக் பாணி கலந்து 1864-ல் கட்டப்பட்டது. அழகு மிளிரும் இந்தக் கட்டிடம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150-வது
ஆண்டு விழாவை முன்னிட்டு INTACH அமைப்பின் முயற்சியால் புனரமைக்கப்பட்டது. இன்றைக்கும் சென்னையின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரம்மாண்ட அரங்காக இருக்கிறது.
விக்டோரியா பப்ளிக் ஹால்
விக்டோரியா பப்ளிக் ஹால்

ஊர்தோறும் பொதுக் கூட்டம் நடத்தும் டவுன் ஹால்கள், அந்தக் காலத்தில் உண்டில்லையா? அப்படி, உருவாக்கப்பட்டதுதான் இந்த அரங்கம். இங்கே சினிமாவும் காட்டப்பட்டிருக்கிறது. விக்டோரியா மகாராணியின் பொன்விழாவை ஒட்டி 1887-ல் ரிப்பன் மாளிகை அருகே இதை வடிவமைத்தவர் ராபர்ட் சிஷ்ஹோம், கட்டியவர் நம்பெருமாள். ரோமனிய (ஆங்கிலேயே) கட்டிடக் கலை பாணியில் அமைந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால் நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து, சமீபத்திய ஆண்டுகளில் புனரமைக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை பயன்பாட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை.
எழும்பூர் ரயில் நிலையத்தின் வேப்பேரி பகுதி வாசல்
எழும்பூர் ரயில் நிலையம்

வழக்கமாக எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பகுதியே நம் கண்களுக்குப் பழகியிருக்கிறது. அதன் மறுபுற வாசலும் அழகானதுதான். 1908-ல் இதை வடிவமைத்தவர் ஹென்றி இர்வின், கட்டியவர் சாமிநாதன்.
திராவிடக் கட்டிடக் கலையின் கூறுகளுடன், இந்தோ சாரசெனிக் பாணியில் கட்டப்பட்டது. காலத்தில் பிந்தையதாக இருந்தாலும் நூறாண்டுகளைத் தாண்டி நல்ல பராமரிப்புடன், ஆயிரக்கணக்கான பயணிகள் தினசரி பயன்படுத்தும் இடமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014


சென்னை மொழி




சென்னைத் தமிழ் வண்ண மயமானது. பல மொழிகளால் வளமூட்டப்பட்டது

சென்னையின் வழக்கமான காட்சிகளில் ஒன்றுதான் அது. கடுமையான போக்குவரத்து நெருக்கடி. பெரிய வாகனங்கள் முன்புறமும் எதிரிலும் வழியை அடைத்துக்கொண்டு நிற்கின்றன. இடது புறம் சிறிய இடைவெளி உள்ளது. அதன் வழியே சென்றால் முன்னேறிவிடலாம். உங்கள் முன்னால் இருப்பவரிடம் அதை விளக்கிச் சொல்ல முயற்சி செய்கிறீர்கள். 

அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்: “லெப்ட்ல வாங்க்கினு போ சார்”.

மெட்ராஸ் பாஷை எனச் சொல்லப்படும் சென்னைத் தமிழ் என்னும் சென்னை வட்டார வழக்கின் சிறப்புகளில் ஒன்று

 இந்தக் கச்சிதம். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்’ என்ற புகழ்பெற்ற தொடர் ஒன்று இதை மேலும் தெளிவாக்கும். எதிராளியிடம், “உன் பேச்சை நான் மதிக்கவில்லை; உன்னோடு பேசுவதால் நேரம்தான் வீணாகிறது; நீ இங்கே நிற்பதுகூடத் தொந்தரவாக இருக்கிறது; நீ நகர்ந்தால் குறைந்தபட்சம் எனக்குக் காற்றாவது வரும்” என்றெல்லாம் சொல்ல சில சமயம் நாம் விரும்பக்கூடும். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்' என்ற தொடர் இத்தனையையும் சிக்கனமாகச் சொல்லிவிடுகிறது.

தாராத்துட்டான்!

பீற்றிக்கொள்ளாதே, உணர்ச்சியை அதிகம் வெளியில் காட்டாதே, முழு உண்மையையும் வெளிப்படுத்திவிடாதே என்ற பொருள்களில் வழங்கிவரும் ‘அமுக்கி வாசி' என்னும் தொடர் இன்னொரு உதாரணம். இப்படி நிறையச் சொல்லலாம். தாராந்துட்டான், பூட்ட கேஸ், உடான்ஸு, மெர்சல், நாஸ்தி என சென்னைத் தமிழின் எந்தச் சொல் அல்லது தொடரை எடுத்துக்கொண்டாலும், சிக்கனம், உணர்ச்சியைக் கச்சிதமாக வெளிப்படுத்தும் பாங்கு, பிற மொழிகளைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மை எனப் பல சிறப்பம்சங்களை உணரலாம்.

கஸ்மாலம் என்ற சென்னைத் தமிழ் வசைச் சொல்லின் வேர்ச் சொல், வடமொழியில் உள்ள ‘கஸ்மலம்'. இதன் பொருள் அழுக்கு. ஜபூர்/ஜபுரு என்ற சொல்லின் வேர்ச் சொல் ஜபுர் என்னும் உருதுச் சொல். பொருள் ஜால வித்தை. அதே பொருளின் அங்கத வடிவில் ஜபுரு காட்டாதே என்று சென்னைத் தமிழில் வழங்கிவருகிறது. சென்னைத் தமிழ் பிற மொழிகளை எப்படி நுட்பமாக உள்வாங்கியிருக்கிறது என்பதை இதுபோன்ற சொற் களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். பஜார், பேஜார், மஜா, கேடி, தௌலத், உல்ட்டா, உட்டாலக்கடி என உதாரணங்களை அடுக்கலாம்.

எதையாவது தொலைத்துவிட்டால் ‘தாராத்துட்டியா’ என்று சென்னைத் தமிழில் கேட்பார்கள். தன்னுடைய பொருளைத் தன்னுடையது அல்ல என்று முற்றாகத் துறந்து பிறருக்குத் தந்துவிடும் செயலே தாரை வார்த்தல். இந்தச் சொல்லின் பொருள் ஆழமாக உள்வாங்கப்பட்டுச் சற்றே அங்கதச் சுவையுடன் தாராத்துட்டியா எனத் தகவமைக்கப்பட்டிருக்கிறது.

பிற மொழிச் சொற்கள் சற்றே திரிந்த நிலையிலும் வித்தியாசமான பயன்பாட்டிலும் புழங்கிவருகின்றன. ‘அப்பீட்’ என்ற சொல் பம்பர விளையாட்டில் பயன்படுத்தப் படுகிறது. கீழே சுற்றும் பம்பரத்தைச் சாட்டையால் சுண்டித் தலைக்கு மேலே எழுப்பிப் பிடிப்பதுதான் அப்பீட். இது ‘அப் ஹெட்’ என்ற சொல்லிலிருந்து மருவி வந்தது என்ற தகவல், ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ என்னும் நாவலில் கூறப்படுகிறது. அம்பேல் என்னும் சொல் ஐ-ஆம்-ஆன்-பெயில் என்னும் தொடரின் மரூஉ என்றும் அந்த நாவல் சொல்கிறது. இவை இரண்டுமே மூலப்பொருளுக்கு நெருக்கமான பொருளிலேயே பயன்பட்டாலும், மாறுபட்ட சூழல்களில் வேறு பொருள்களையும் கொள்கின்றன. கிளம்புகிறேன் (நான் அப்பீட்டு) என்றும் ஆளை விடுங்கள் (அம்பேல்) என்றும் வழங்கப்படுகின்றன. ஒரு சொல் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு வடிவங்கள் எடுப்பது மொழியின் அழகு அன்றி வேறென்ன?

மொழி கூறும் வரலாறு

சென்னை மொழிக்கு வேறு எந்த வட்டார வழக்குக்கும் இல்லாத தனித்தன்மை - பல மொழிகள் கலந்த தன்மை - உள்ளது. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் ஆந்திரப் பிரதேசத்தின் தாக்கத்தை நைனா, டப்பு, துட்டு போன்ற சொற்களிலும் (எனக்)கோசரம், (அதுக்)கோசரம் போன்ற வழக்குகளிலும் காணலாம். ஆங்கிலம், தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளின் கலப்பை ஆராய்ந்தால், பிற மொழி மக்களுடனான சென்னையின் தொடர்பையும் வரலாற்றுரீதியில் புரிந்து கொள்ளலாம்.

இந்த அளவுக்கு வண்ண மயமான, பல்வேறு மொழிகளால் வளமூட்டப்பட்ட இன்னொரு வழக்கை எந்த மொழியிலும் காண்பது அரிது. இத்தகைய வழக்கை மரியாதையுடன் ஆராய்வதற்குப் பதிலாக, இழிவுபடுத்தும் போக்கே பொதுவாக நிலவுகிறது. சென்னைத் தமிழின் கொச்சை வழக்கைக் கேட்ட மாத்திரத்தில் கூசிப்போகும் மேட்டுக்குடியினர் பலர் இருக்கிறார்கள். பலரும் இதைத் தமிழின் இழிவழக்காகக் கருதி விமர்சனமும் பரிகாசமும் செய்வதுண்டு. கூவம் பாஷை என்று சொல்லும் அளவுக்குச் சிலர் போய்விடுகிறார்கள். நாற்றமெடுக்கும் கூவத்தோடு இம்மொழி ஒப்பிடப்படுவது தற்செயலானது அல்ல. தமிழ்ப் பரப்பின் பொதுப்புத்தியின் பார்வை இது.

வட்டார வழக்குகள் ஒரு மொழியின் உயிர்ப்பை உணர்த்தும் அடையாளங்கள். மதுரைத் தமிழ், கொங்கு தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போல சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். எல்லா வட்டார வழக்குகளையும் போலவே பல்வேறு இயல்பான காரணிகளால் உருவாகி, தொடர்ந்த பயன்பாட்டினால் உருமாறிவரும் ஒரு வழக்கு அது.

களுத மட்டும் சரியா?

சென்னைத் தமிழை இழிவுபடுத்துபவர்கள் அதன் உச்சரிப்புத் திரிபுகளையும் (வலிச்சிக்குனு, இஸ்துகினு) கொச்சைகளையும் (துன்ட்டியா) சுட்டிக்காட்டுவார்கள். குறைகளும் திரிபுகளும் எல்லா வழக்குகளிலும் உள்ளன. வந்துகொண்டிருக்கிறேன் என்பதை வந்துட்ருக்கேன், வந்துக்கிருக்கேன், வந்துண்ட்ருக்கேன் என்றெல்லாம் சொல்வது வட்டார/சாதி வழக்காக அங்கீகாரம் பெறுகிறது. ஆனால், வந்துனுருக்கேன் என்றால் மட்டும் அது இழிவழக்காகக் கருதப்படுகிறது. கஷ்டம் என்பதை கஸ்டம் என்று சென்னைத் தமிழர் சொல்கிறார் என்றால் சிவாஜி என்பதை ஜிவாஜி என்று நெல்லைத் தமிழர்கள் சிலர் சொல்லத்தான் செய்கிறார்கள். 
கழுதையைக் கய்தே என்பது சென்னைத் தமிழ் வழக்கு. இதைக் களுத என்று சொல்லும் தமிழர்கள் தமிழகமெங்கும் இருக்கிறார்கள். 

ஆனால், சென்னைத் தமிழின் கொச்சை மட்டும் பரிகசிப்புக்கும் இழிவுக்கும் உள்ளாக்கப்படுகிறது.
வசைச் சொற்களை வைத்து சென்னைத் தமிழை இழிவாகப் பார்க்கும் போக்கும் உள்ளது. வசைச் சொற்கள் சென்னைத் தமிழின் தனிச் சொத்து அல்ல. எல்லா மொழிகளையும் போலவே தமிழிலும் வசைச் சொற்கள் நிறையவே உள்ளன. 

சென்னைத் தமிழைப் பேசுபவர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவதால் சென்னைத் தமிழே வசைத் தமிழ் ஆகிவிடாது. கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும் பிற வட்டாரத்து மக்களின் வட்டார வழக்குகளுக்கும் இதே அளவுகோல் பின்பற்றப்படுவதில்லை என்பதைப் பார்க்கும்போது, சென்னைத் தமிழின் மீதுள்ள ஒவ்வாமைக்குப் பின் உள்ள மேட்டிமைத்தனத்தைப் புரிந்துகொள்ளலாம். சென்னைத் தமிழை ரசிக்கும் சிலரும் தட்டிக்கொடுக்கும் மனப்பாங்கோடுதான் அதை அணுகுகிறார்கள்.


வாழும் மொழிக்கான பல்வேறு இலக்கணங்களையும் தேவைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னைத் தமிழ் என்னும் வட்டார வழக்கை மொழி மீது அக்கறை உள்ள யாரும் புறக்கணிக்கவோ இழிவுபடுத்தவோ மாட்டார்கள். மொழியின் தன்மைகள் இடம், தொழில், சாதி வரலாறு ஆகிய காரணங்களால் மாறுவது மிக இயல்பானது. 

வெகுமக்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழிக் கூறுகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியவை. இதில் உயர்வு, தாழ்வு காண்பது மேட்டிமைவாதம். அந்த மேட்டிமைத்தனத்தைக் கைவிட்டு, சென்னைத் தமிழை முறையாக அணுகு வதற்கான பார்வையை வளர்த்துக்கொள்வதே மொழி யின் மீதுள்ள நம் அக்கறையை வெளிப்படுத்தும்.

- அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014

பிரபஞ்சன் பார்வையில்...-




பன்மைப் பண்பாட்டு அடையாளம் கொண்ட சென்னை என்னும் ஊர்த் தொகுதியை ஒரு சிமிழுக்குள் அடக்க இயலாது!

1970-களின் ஓர் ஆண்டில்… ஒரு மதியப் பொழுதில்… மவுன்ட் சாலையில் வந்து இறங்கினேன்

. பி.ஆர்.அன். சன்ஸ் கட்டிடத்துக்கு அருகில் இருந்த ஒரு தூங்குமூஞ்சி மரத்தின் நிழலில் நின்று, நான் வாழ வந்த பூமியை உணரலானேன். 

இன்று வரை சென்னை மரங்கள் எனக்கு நிழல் தர மறுத்ததில்லை.

என் மனம் நிறைந்து பொங்கி வழிந்தது. சென்னைக்கு வந்து சேர்வது எத்தனை ஆண்டுக் கனவு? 

என் முன்னால் இருந்த மவுண்ட் சாலையின் நீளத்தையும் அகலத்தையும் அளந்துகொண்டு நின்றேன்.

மிக விசாலமான ஒரு தெருவை ஒரு சங்கக் கவி ‘ஆறு கிடந்தன்ன அகல நெடுந்தெரு' என்று வர்ணித்தது நினைவில் வந்தது. 

ஆறு படுத்துக்கிடப்பதுபோல் இருக்கிறதாம் அவன் பார்த்த தெரு. அவன் பார்த்த தெருவில் தேர்கள் ஓடியிருக்கும். புரவிகள், யானைப் படைகள் இடித்துக்கொள்ளாமல் நடந்திருக்கும். எனக்கு முன் வெளிகளை நிறைத்துக்கொண்டு உலோக ரதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நான் பார்த்து வியந்த அந்த இயக்கத்தின் ஜீவத்துடிப்பு மிகுந்த கணம் இன்னும் என் நினைவில் நிற்கிறது.

சென்னைக்கு வந்த புதிதில் நான் காலை நேரங்களில் மிகவும் அவஸ்தைப்பட்டுவிட்டேன். உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட அந்தக் கணங்களை இட்டுநிரப்பும் ஓசைகளும் வாசனைகளும் கிடைக்க வில்லை. 

சென்னையில் உறங்கி எழுந்த இரண்டாம் நாள் என் அறையைக் கண்டு நான் பயந்துபோனேன். என்னை யாரோ கடத்திக்கொண்டு வந்து இங்கு போட்டது மாதிரி இருந்தது. அது நான் எடுத்த அறை என்பது எனக்கு உறைக்க வெகு நேரம் பிடித்தது.

ஓசையற்ற இரைச்சல்

புதுச்சேரியில் பல விதமான ஓசைகளும் வாசனை களுமே எனக்கு உறக்கம் கலைக்கும் விஷயங்களாக இருந்தன. எங்கள் தோட்டத்து மரங்களில் விடிந்தும் விடியாததுமாக வந்துசேர்ந்து அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகள். சமையல்கட்டிலிருந்து வரும் வாசனை. இந்த இரண்டும்தான் நான் எழுந்திருக்கும் நேரம் என்பது என் பிரக்ஞையாக இருந்தது. தஞ்சாவூரில் ஐயன் கடைத்தெரு விழித்துக்கொண்டு ஊதுபத்தி வாசனையோடு காலை நேரத்தை வரவேற்கும். வெங்கடேசப் பெருமாள் அக்ரகாரத்துக்கே உரிய சப்தங்கள், காய்கறி வியாபாரிகள், பால் வாங்கப்போகும் மாமிகளின் கால் சரசரப்புச் சத்தங்கள், அவர்களுக்குப் பால் தர நடக்கும் மாடுகளின் குளம்புச் சத்தங்கள், கறப்பவர்களை உசுப்பேற்றும் கிருஷ்ணக் கோனாரின் அதட்டல் குரல்.

சென்னையில் எந்த ஓசையும் வாசனையும் இல்லாமல் பொழுது விடிந்தது. சிட்டுக்குருவிகள் இல்லாத கான்கிரீட் காடு. பொறியில் மாட்டிக்கொண்ட எலி மாதிரி ஆட்டோக்கள் கிறீச்சிட்டன.

இங்குதான் நான் 30 வருஷங்களாக வாழ்கிறேன். இங்கிருந்து போக முடியவில்லை. சென்னைக்கு ஏதோ அமானுஷ்ய, ஆகர்ஷண சக்தி இருக்கிறது.

நாம் வாழும் வீடுகளுக்கு முகம் இருக்கிறது; அவை பேசும் என்று எழுதினார் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தா யெவ்ஸ்கி. எனக்குத் தோன்றுகிறது, வாசனையும் இருக்கிறது என்று. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தனியாக அவற்றை ஞாபகப்படுத்தும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும் வாசனை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

சென்னையின் வாசனை என்ன? 
முதலில் சென்னை என்பதுதான் என்ன? 

இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் அதைச் சுற்றி இருந்த மீனவர் குடி யிருப்பே தொடக்ககாலச் சென்னை. ஒரு தீப்பெட்டி அளவுக்குச் சின்ன ஊர் அல்லது பேட்டை. அப்போதே கோட்டைக்கு வெளியே இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் எல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற ஊர்கள். வெள்ளையர் அதிகாரமும் ஆதிக்கமும் வளர வளர, எல்லா ஊர்களும் அவர்களின் ஜேபிகளில் வந்து விழுந்தன. 

இன்று வட சென்னை என்று அறியப்படும் புறக்கணிக்கப்பட்ட பகுதியே வெள்ளையர் மற்றும் அவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் பல புகழாளர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்தது. இராமலிங்க அடிகள், பி.டி. தியாகராயர், வள்ளல் பச்சையப்பர் முதலான பலரும் வாழ்ந்த பகுதி அது.

எதுதான் சென்னை?

சென்னை என்று இன்று அறியப்படுவது பல ஊர்களின் தொகுதியே. அந்த ஊர்களும் சாதி, வர்க்கம், செய்தொழில் காரணங்களால் தனித்தனி வாழ்க்கை முறை கொண்ட சிற்றூர்களாகும். எனவே, பன்மைப் பண்பாட்டு அடையாளம் கொண்ட சென்னை என்னும் ஊர்த் தொகுதியை ஒரு சிமிழுக்குள் அடக்குதல் சாத்தியம் இல்லை.

ஆர்க்காடு நவாபுகள் காலத்து சையது கான் பேட்டையும் (சைதாப்பேட்டை), பார்த்தசாரதிப் பெருமாளை லட்சியமாகக் கொண்ட ஒரு பக்கத் திருவல்லிக்கேணியும், ஆர்க்காடு இளவரசர்கள், வாலாஜா மரபினைச் சார்ந்த இசுலாமியர்க் குடியிருப்புத் திருவல்லிக்கேணியும், கபாலீசுவரரை மையம் கொண்ட பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார், கடற்கரையை ஒட்டிய கிறித்துவர்களின் வாழிடமான மயிலாப்பூரும், சாந்தோமும் என்று எல்லாராலும் அடர்த்தி கொண்ட ஊர்களின் ஒட்டுமொத்தத் தொகுதியே இன்று சென்னை எனப்படுவது.

இந்து, சமணம், பொளத்தம் போன்ற பல்வேறு மதத்தினருக்கும் வாழிடமாகச் சென்னை விளங்குவதே அதன் சிறப்பு. எழுத்தாளர்கள் பலர் சென்னையை ருசித்து, சென்னையின் பயன் கொண்டு வாழ்ந்தாலும், சென்னையைப் பற்றி ஒரு நரகத்தின் சித்திரத்தையே இன்னும் தந்துகொண்டிருக்கிறர்கள். தன்னிடம் இருக்கும்படி சென்னை யாரையும் கட்டாயப் படுத்தியதே இல்லை. 

வெறுப்பாளிகள் சென்னையின் மண்ணைத் தட்டிவிட்டு ஊர் போய்ச்சேர வேண்டியதுதானே? 

யாரும் போவதாகத் தெரியவில்லை. காரணம், சென்னையின் ருசியை உணர்ந்தவர்கள் சென்னையை விட்டுப் பிரிதல் சாத்தியமே இல்லை
.
எல்லோருக்குமான நகரம்

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ, யாராக இருக்க விரும்புகிறீர்களோ அதற்குத் தக தன்னைத் தகவமைத்துக்கொண்ட சீர்மை மிக்கது சென்னை. இரண்டு ரூபாய்க்கும் நல்ல தேநீர் உங்களுக்குக் குடிக்கக் கிடைக்கும். 75 ரூபாய்க்கும் ஒரு கப் தேநீரை அருந்த முடியும். மாடிப்படியின் கீழ் ‘மாது’ மாதிரியும் காலம் தள்ள முடியும். நட்சத்திர விடுதிகளிலும் உங்களைச் சீராட்டிக்கொள்ள முடியும். கூடைச் சோறும், தள்ளுவண்டி உணவும், உயர் ரக சர்வதேசத் தர உணவும் நீங்கள் பெறக்கூடிய இடம் சென்னை.

அடுத்த வேளை உணவுக்கும் உத்தரவாதமில்லாத மக்கள், சென்னையில் காற்று வெளியில் நீட்டப்படும் கருணைக் கரத்தைப் பற்றிக்கொண்டுதான் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்துகிறார்கள். அதற்கும் அடுத்த வேளை அவர்களுக்கு உணவு வழங்கத் தேவதூதர்கள் வருவதில்லைதான். அவர்களை விடவும் உன்னதமான சக மனிதர்கள் வந்துவிடவே செய்கிறார்கள்.

நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கான சொர்க்க பூமி சென்னைதான். நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, மேட்டு நிலமோ, பள்ளமோ எதுவானாலும் என்ன, மக்கள் எப்படியோ அப்படித்தான் ஊரும் இருக்கும். மக்களிடம் இருந்து ஊருக்கும் ஊர்க் குணம் மக்களுக்கும் பரிமாற்றம் கொள்வதுதானே இயற்கை. சென்னையின் வண்ணத்தை மக்களும், மக்களின் வண்ணத்தைச் சென்னையும் பூசிக்கொள்கிறார்கள்.
எல்லோரையும் தனக்குள் உள்ளடக்கிக்கொண்டு, எல்லோருக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பங்களித்து 

எல்லோரையும் வாழ வைக்கும் பெரும் கருணையே சென்னையின் வாசனை.
கௌரவமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சென்னை வந்து, அகௌரவமாக வாழ நேர்ந்தவர்கள், இந்த ஊர் தம்மை வஞ்சித்துவிட்டதாக நினைக்கிறவர்கள், எல்லோரும் விடிந்து எழுவது சென்னையாகத்தான் இருக் கிறது. 

ஏதோ ஒரு மந்திரக் கயிற்றால் சென்னை அவர் களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. என்னையும்தான்.

- பிரபஞ்சன், எழுத்தாளர்.

இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014



சென்னையும் சினிமாவும்: குதிரைகள் தயவால் உருவான கோடம்பாக்கம்!

நியூடோன் ஸ்டூடியோவில் டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை இயக்கும் டங்கன்
நியூடோன் ஸ்டூடியோவில் டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை இயக்கும் டங்கன்

மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட சென்னையை ஆட்சி செய்ய இங்கிலாந்து அரசால் கவர்னர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மதராஸ் கவர்னராக இருந்தார். அப்போது புனித ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே, வெள்ளையர்களுக்கு உதவி வேலைகளைச் செய்ய அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி ஜார்ஜ் டவுனாக உருவானது. 

பிறகு கோல்கொண்டா சுல்தானின் நிர்வாகத்தில் இருந்த திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர் ஆகிய கிராமங்களை விலைக்கு வாங்கி நகரின் எல்லையை விரிவுபடுத்தினார் கவர்னர் யேல். 

கோட்டைக்குள் இருந்த குதிரை லாயத்தால் சுகாதாரப் பிரச்சினை எழுந்தது. இதனால் குதிரைகளை மேய்க்க ‘பிளாக் டவுன்’ அதாவது கறுப்பர்கள் நகரம் என்றழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் தேர்வு செய்யப்பட்டது. 

ஆனால் அங்கே போதிய மேய்ச்சல் நிலம் இல்லை. மேய்ச்சல் நிலமும் நீர்வளம் நிறைந்த பகுதியைத் தேடியபோது, கண்களில் பட்டது ஆற்றுக்கரையில்(அடையாறு) இருந்த திருப்புலியூர். அதுதான் இன்றைய கோடம்பாக்கம்.

ஆடு மாடுகளை நம்பி வாழும் இடையர்குடி மக்கள் இங்கே அதிகம் வாழ்ந்தனர். கர்நாடக நவாபுகளின் ஆதிக்கத்தில் இருந்த இந்தப் பகுதி, அவர்களது குதிரைப்படை லாயமாகவும் இருந்தது. நவாபுகளிடமிருந்து முதல்தரமான குதிரைகளை வாங்கிய யேல் நிர்வாகம், புலியூருக்குத் தனது குதிரைகளின் லாயத்தை மாற்றியது. நவாபுகள் தங்கள் குதிரைப்படை லாயத்தை உருது மொழியில் ‘ கோடா பாக்’ என்று அழைத்தனர்.

கோடா பாக் என்பதற்குக் குதிரைகளின் தோட்டம் என்பது பொருள். கோடா பாக்கே காலப்போக்கில் கோடம்பாக்கம் என்று மருவியதாகச் சொல்கிறார்கள் சென்னை வரலாற்றை ஆய்வுசெய்தவர்கள். இப்படிப்பட்ட கோடம்பாக்கம் எப்படிக் கனவுகளை உற்பத்தி செய்யும் கோலிவுட்டாக மாறியது?

புரசைவாக்கத்திலிருந்து முதல் கனவு

அரிச்சந்திரா படத்தின் மூலம் பால்கே அடைந்த புகழைப் பார்த்து, மவுனப் படத்தயாரிப்பில் ஈடுபடச் செல்வந்தர்கள் பலர் முன்வந்தார்கள். அன்றைய மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆர்.நடராஜ முதலியாருக்கும் அப்படியொரு ஆசை உண்டானது. அமெரிக்காவில் தயாராகும் மோட்டார் கார்களையும் அவற்றுக்கான வாகன உதிரிப்பாகங்களையும் ‘ரோமர் டான் & கம்பெனி’ என்ற பெயரில் வியாபாரம் செய்துவந்த இவர், தனது அலுவலகம் இயங்கிவந்த புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையை 1915-ம் ஆண்டு விலைக்கு வாங்கினார். அதையே ஸ்டூடியோவாக மாற்றி அமைத்தார். அதற்கு ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்று பெயரும் சூட்டினார். பிறகு சினிமா கேமரா வேண்டுமே? கேமரா வாங்க கல்கத்தா செல்லும் முன் சினிமா கேமராவை இயக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

சென்னை ஆர்வலர்களுக்கு ஏவிஎம் ஸ்டூடியோவை சுற்றிக் காட்டும் மோகன் வி ராம்
சென்னை ஆர்வலர்களுக்கு ஏவிஎம் ஸ்டூடியோவை சுற்றிக் காட்டும் மோகன் வி ராம்

முதலியாரின் அதிர்ஷ்டமோ என்னவோ, அவர் நினைத்த நேரத்தில் கர்சன் பிரபுவைப் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிக்க மதராஸ் வந்திருந்தது இங்கிலாந்து படக்குழு ஒன்று. அந்தக் குழுவின் கேமராமேன் ஸ்டீவர்ட் ஸ்மீத்தை அழைத்து வந்து தனது ஸ்டூடியோவைக் காட்டினார் முதலியார். அவரது குழுவுக்கு ஆவணப்படமெடுக்க மூன்று கார்களையும் கொடுத்து உதவினார்.
அன்று முதலியார் விற்றுவந்த ஒரு காரின் விலை பிரிட்டிஷ் இந்தியப் பணத்துக்கு வெறும் ஆயிரம் ரூபாய். முதலியாரின் உதவியில் நெகிழ்ந்த ஸ்டீவர்ட் அவருக்குச் சினிமா கேமராவை இயக்கக் கற்றுக்கொடுத்தார். கூடவே மைக்கேல் ஓமலேவ் என்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

37 நாட்கள் 50 ஆயிரம் வசூல்

கல்கத்தா சென்று கேமரா வாங்கி வந்த முதலியார், உடனடியாக ‘கீசக வதம்’ என்ற மகாபாரதக் கிளைக் கதையைத் தேர்வுசெய்து, படத் தயாரிப்பில் இறங்கினார். கதை எழுதி, காட்சிகளை அமைத்து மட்டுமல்ல, நடிகர்களை இயக்கியது, கேமராவை இயக்கியது, எடிட் செய்தது, உட்பட மவுனப் படக் காலத் தமிழ்சினிமாவின் முதல் டி.ராஜேந்தர் அவர்தான். 37 நாட்களில் 6 ஆயிரம் அடிகள் படம் எடுத்து முடித்ததும், சும்மா பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருக்க ஒரு வெற்றிகரமான மோட்டார் வியாபாரியால் முடியுமா என்ன? மவுனப் படம் என்பதால் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் வசனம் அப்போது டைட்டில்களாக எழுதப்பட்டு ஆப்டிகல் முறையில் சேர்க்கப்ப்டும்.

‘கீசக வதம்’, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வசன டைட்டில்களுடன் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்கான இந்தி டைட்டில்களை எழுதியவர் காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி என்ற ஆச்சரியமான தகவலும் கிடைக்கிறது. இதைவிட ஆச்சரியம் கடல் கடந்து வெளிநாட்டு மார்க்கெட்டைச் சந்தித்தது தமிழின் முதல் மவுனப் படம். ஆமாம்! பர்மா, மலேயா, பினாங்கு ஆகிய இடங்களில் திரையிடப்பட்டது. 35 ஆயிரம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் முதலியாருக்கு 15 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. அதாவது ‘கீசக வத’த்தின் மொத்த வசூல் 50 ஆயிரம்.

இதன் பிறகு வரிசையாகப் புராணக் கதைகளை படமாக எடுத்துக் குவித்தார் முதலியார். சினிமா தொழில் அவருக்குக் கொட்டிக்கொடுத்தது. ஆனால் எதிர்பாராமல் அவரது மில்லர்ஸ் சாலை ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் அவரது ஒரே மகன் அகால மரணமடைந்தார். இதனால் சினிமாவையே வெறுத்தார் தமிழ் சினிமாவின் முதல் தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான முதலியார் ஸ்டூடியோவை விற்றுவிட்டு அந்தத் தொழிலிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் சினிமாவுக்குத் திரும்பவே இல்லை.

மதராஸைப் புரட்டிப்போட்ட பேசும்படம்

மதராஸின் முதல் சினிமா தியேட்டர் எது என்பதில் இன்னும் சர்ச்சை இருந்தாலும், மவுனப் படங்களுக்கான முதல் திரையரங்கைக் கட்டியதாகச் சொல்லப்படும் வெங்கையா சினிமா தயாரிக்க முன்வந்தார். இதற்காகத் தனது மகன் பிரகாஷ் என்பவரை லண்டனுக்கு அனுப்பி ‘ கினிமட்டோகிராஃப்’ படித்துவரச் செய்தார். வந்தவேகத்தில் சென்னை புரசைவாக்கத்தில் தனது அப்பாவின் ‘ஸ்டார் ஆப் தி ஈஸ்ட்’ பிலிம் கம்பெனிக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஸ்டூடியோ அமைத்தார். இந்த ஸ்டூடியோவின் பரப்பளவு 600 ஏக்கர். இங்கே பல வெற்றிப்படங்கள் தயாராகின.

இந்தக் காலகட்டத்தில் மவுனப் படங்களின் யுகம் முடிந்து பேசும் படக் காலத்தைத் தொடங்கி வைத்த ‘காளிதாஸ்’ திரைப்படம்’ இம்பீரியல் மூவி டோன் ஸ்டூடியோவில் தயாரானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் முதல் படம் காளிதாஸ்தான். படத்தை இயக்கியவர் எச்.எம். ரெட்டி.

1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி, இன்று முருகன் தியேட்டராக இருக்கும் ‘சினிமா சென்ட்ரல்’ தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்துக்காகப் பொது இடங்களில் வைக்கப்பட்ட தட்டி விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முதல் தமிழ் பேசும் படத்தைக் காண, ரசிகர்கள் வெளியூர்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக வர, சினிமா சென்ட்ரலில் பிரிட்டிஷ் போலீசாரின் பாரா போடப்பட்டது. இந்தப் படத்தில் பூசாரியாக நடித்த எல்.வி.பிரசாத், பின்னாளில் கோடம்பாக்கத்தின் மிகப் பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான பிரசாத் ஸ்டூடியோவைக் கட்டியவர்.
பிறகு கோடம்பாக்கத்தின் பக்கத்து வீடாகிய கீழ்ப்பாக்கத்தில் 1934-ம் ஆண்டு ‘ஸ்ரீனிவாசா சினிடோன்’ என்ற ஸ்டூடியோவைத் தொடங்கினார் நாராயணன். 

தமிழின் முதல் பேசும் படம் என்று கூறப்படும் ‘னிவாச கல்யாணம்’ படமாக்கப்பட்டதும் இங்கேதான். இங்கே 100க்கும் அதிகமான தெலுங்கு, கன்னடம், மலையாளப் பேசும் படங்கள் படமாக்கப்பட்டன. இதனால் தென்னிந்தியாவில் அன்று பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் பலரும் மதராஸில் ஜாகை செய்தார்கள்.

முதலில் காரைக்குடியில் இயங்கிவந்த தனது ஸ்டூடியோவை 1948-ல் வடபழனிக்கு மாற்றினார் ஏ.வி.எம் செட்டியார். பிறகு பி.என். ரெட்டி தொடங்கிய வாகினி ஸ்டூடியோவும் அருகிலேயே அமைய, எல்லீஸ்.ஆர். டங்கன் அதிகப் படங்களை இயக்கிய மூவிடோன் ஸ்டூடியோ கிண்டியில் அமைந்தது. இப்படிக் கோடம்பாக்கத்தைச் சுற்றி உருவான 28 ஸ்டுடியோக்களில் இன்று எஞ்சியிருப்பது ஏ.வி.எம்., பிரசாத் ஸ்டுடியோ உட்பட ஒரு சிலவற்றின் உள்ள சில தளங்கள் மட்டும்தான்.

கோடம்பாக்கம் கனவுத் தொழிற்சாலை என்பதற்கு அடையாளமாக இன்று அங்கே ஒரு திரையரங்கு கூட இல்லை. 

கோடம்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான், ஜெயம் ரவி போன்ற பிரபலங்கள் குடியிருப்பதால் தனக்கும் திரைக்குமான உறவை இன்னும் இழக்காமால் இருக்கிறது குதிரைகளின் தயவால் உருவான கோடம்பாக்கம்.

இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014

சென்னையின் 375-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு



சென்னையின் 375-வது பிறந்த நாளையொட்டி அஞ்சல் உறை வெள்ளிக்கிழமை வெளியிடப் பட்டது.

கலாசாரப் பெருமையும் பாரம்பரியமும் கொண்ட சென்னை மாநகரின் 375-வது தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னையில் பயன்பாட்டில் இருந்த பழமையான போக்குவரத்துகளை நினைவுப்படுத்தும் வகையில் ட்ராம், படகு உள்ளிட்டவை களின் படங்களை கொண்ட அஞ்சல் உறை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு வட்டத்தின் தலைமை தபால் அலுவலர் எஸ்.சி.பிரம்மா வெளியிட இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத் தின் தொல்லியல் மேற்பார்வை யாளர் ஜி.மகேஸ்வரி பெற்றுக் கொண்டார்.

இந்த தபால் உறையில் உள்ள புகைப்படங்களை டி.ஹேமச்சந்திர ராவ் (72) என்ற பொறியாளர் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆர்வலர் சேகரித்துள்ளார். இந்த உறையின் அட்டையில் பங்கிங்ஹாம் கால்வாய் 1806-ம் ஆண்டு படகு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதை நினைவு கூறும் புகைப்படம் உள்ளது. அட்டையின் பின்புறம் 1800களில் தொடங்கி சென்னையில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு போக்குவரத்துகள் உள்ளன.
நிகழ்ச்சியில் எஸ்.சி.பிரம்மா கூறுகையில், “சென்னை மிகவும் பெருமைக்குரிய இடமாகும். இது கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களை விட மிகப்பழமை யானது. ஜார்ஜ் கோட்டை, கலங்கரை விளக்கம், சென்னை யின் பாலங்கள், சென்னையின் பாரம்பரிய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை குறிக்கும் 4 தபால் உறைகள் ஏற்கெனவே வெளியிடப் பட்டுள்ளன,” என்றார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் கிளைவ் அரங்கில் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னைப் பற்றிய புகைப்பட கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஜி.மகேஸ்வரி கூறுகையில், “சென்னையின் பாரம்பரிய கட்டிடங்கள் பல காரணங்களால் சேதமடைந்து வருகின்றன. நகரமயமாக்கல் காரணமாகவும், மக்களின் கவனக் குறைவு காரணமாகவும் இவை தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன.

பாரம்பரிய கட்டிடங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்,” என்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர். நல்லி குப்புசாமி கூறுகையில், “முன்பு, சென்னையிலிருந்து திருப்போரூர் முருகன் கோயிலுக்கு செல்ல பங்கிங்ஹாம் கால்வாயில் படகு வழியாக செல்வதையே மக்கள் விரும்பினர். ட்ராம்கள் வேப்பேரியிலிருந்து இயக்கப்பட்டன. சாலைகளில் “ட்ரிங்” “ட்ரிங்” என்ற ட்ராம் ஒலி இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டு பல நினைவுகளை எழுப்புகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சி தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மெட்ராஸ் பாரம்பரிய ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014