சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருந்ததற்கு, வங்கியின் உதவி மேலாளர் ஒருவர் தான் முக்கியக் காரணமாக இருந்துள்ளார். கட்டிடத்தில் தீ பற்றியதாக அவர் முதலில் அளித்த எச்சரிக்கையின் அடிப்படையிலேயே மற்ற ஊழியர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
நேற்று மதியம் சென்னை பாரிமுனையில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான எஸ்.பி.ஐ வங்கிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை மதிய வேளையாகையால் பணி முடிந்து வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.
ஆனபோதும், 2-வது மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று மதியம் வங்கி ஊழியர்கள் சங்க கூட்டம் நடைபெற இருந்ததால், அங்கு மட்டும் பிற வங்கிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடி இருந்தனர்.
கட்டிடத்தில் தீப்பற்றிய தகவலை அவர்களுக்கு கூறி, அவர்களை கட்டிடத்தில் இருந்து வெளியேற கூறியுள்ளார் ‘பாரத ஸ்டேட்' வங்கி ஆதி திராவிடர் பழங்குடியினர் ஊழியர்கள் பொதுநலச்சங்க தலைவரும், நுங்கம்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி மேலாளருமான முருகன் என்பவர். இதனால் தான் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப் பட்டது.
இது தொடர்பாக முருகன் கூறுகையில், ‘நான் சங்க பணியின் காரணமாக விபத்து நடைபெற்ற கட்டிடத்தின் முதல் தளத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது திடீரென்று புகை வந்தது. உடனே சென்று பார்த்தபோது தீ மளமளவென எரிந்துகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். உடனே கட்டிடத்தில் உள்ள கேன்டின், 2-வது தளத்தில் யாரேனும் இருக்கிறார்களா என்று ஓடிச் சென்று பார்த்தேன். தீ, தீ.. உடனே அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியபடி ஓடினேன். இதனால் தீ விபத்தில் சிக்காமல் 40 பேர் வெளியே ஓடி வந்துவிட்டனர்" எனத் தெரிவித்தார்.
விபத்து நடைபெற்ற வங்கிக்கு எதிரே, செல்போன் கடை நடத்தி வரும் அசார் என்பவர் விபத்துக் குறித்துக் கூறுகையில், "நான் வழக்கம் போல் கடையில் இருந்தேன். அப்போது 3.15 மணி அளவில் திடீரென்று வங்கி அலுவலகத்தில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.
உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தேன். 15 நிமிடத்தில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க தொடங்கினர். இறைவன் கருணையால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஜெயசித்ரா 13 ஜுலை 2014
ஜெயசித்ரா 13 ஜுலை 2014
No comments:
Post a Comment