சென்னை: நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள 200 ஆண்டு பழமையான வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 மாடிகள் இடிந்து விழுந்தன.
எனினும் அதிர்ஷ்டவசமாக அக்கட்டிடத்தில் இருந்த ரூ 100 கோடி பணம் தீக்கிரையாகவில்லை. சென்னை பாரி முனையில் உள்ள இந்த பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான இரண்டு மாடிக் கட்டிடம் அரண்மனை வடிவிலானது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பாரம்பரியமிக்க வரலாற்று சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்கும் மையமான ஸ்டேட் வங்கியின் எஸ்.எம்.இ. கிளை உள்ளது.
முதல் தளத்தில் ‘பாரத ஸ்டேட்' வங்கியின் 6-வது மண்டல அலுவலகமும், 2-வது மாடியில் வங்கியின் 2-வது மண்டல அலுவலகமும் இயங்கி வருகிறது.
வங்கி ஊழியர்களின் அனைத்து ஆவணங்களும் இங்கு தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை என்பதால் மதியம் பணி முடிந்ததும் பிற்பகல் 2 மணி அளவில் ஊழியர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் இக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் திடீர் தீ பற்றியது.
தீயணைப்பு வீரர்கள்...
தீயின் உக்கிரத்தை கருத்தில் கொண்டு தண்டையார்பேட்டை, எழும்பூர், வேப்பேரி உள்பட 18 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இடிந்து விழுந்த கட்டடம்...
முழு வீச்சில் தீயணைப்பு பணி தொடங்குவதற்கு முன்பாகவே 2-வது மாடியில் மேல்தளம் அப்படியே எரிந்து உள்ளே விழுந்தது. இதனால் முதல் மற்றும் 2-வது தளத்தில் உள்ள அத்தனை ஆவணங்களும் எரிந்து சாம்பலாயின. பின்னர் சிறிது நேரத்தில் முதல் தளத்தின் பெரும் பகுதியும் இடிந்து விழுந்தது.
பணப்பெட்டகம்...
இதற்கிடையே, முதல் தளத்தில் ‘பாரத ஸ்டேட்' வங்கி கிளைகளுக்கு அனுப்புவதற்காக, ரிசர்வ் வங்கியில் இருந்து நேரடியாக கொண்டு வரப்படும் கோடிக்கணக்கான பணம் வைக்கப்படும் அறை உள்ளது. அந்த அறை தீ பற்றிக்கொள்ளாதபடி, தீ தடுப்பு சாதனங்களோடு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், தரை தளத்தில் உள்ள வங்கி கிளையில் 4 ஏ.டி.எம்.கள் உள்ளன. மேலும் இ-கார்னர் வசதியும், ‘காயின் வெண்டிங் மிஷின்' வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தப்பிய பணம்...
நேற்று இங்கு மொத்தமாக ரூ 100 கோடி பணம் இருந்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இப்பணம் மற்றும் லாக்கரில் இருந்த பணம் தீவிபத்தில் சிக்கவில்லை. ஆனால், தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள்பல எரிந்து நாசமாகி விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து துண்டிப்பு...
தீ விபத்து குறித்த தகவல் அறிந்தும் ராஜாஜி சாலை பகுதியில் வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடிவிட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மின்கசிவே காரணம்...
சுமார் 4 மணி நேரம் போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். வங்கி கட்டிடத்தின் முதல் தளத்தில் தேவையற்ற காகித குவியல் இருந்ததாகவும், அதில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மின்கசிவால் தீப்பற்றி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆம்புலன்ஸ்கள்...
இதற்கிடையே, தீயை அணைக்கும் முயற்சிகளுக்கிடையே வங்கி கட்டிடத்திற்குள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் முயற்சியிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கட்டிடத்திற்குள் யாரும் சிக்கவில்லை என்று உறுதியாக தெரிந்த போதும், அவசரத் தேவைக்காக வங்கி அருகே தயார் நிலையில், நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயசித்ரா 13 ஜுலை 2014
No comments:
Post a Comment