Thursday, October 16, 2014

பாடி திருவல்லீஸ்வரர் ஆலயம்


குரு பெயர்ச்சி பரிகாரத்துக்கு பாடி திருவல்லீஸ்வரர் ஆலயம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மயிலாப்பூர், திருவான்மிïர், திருவேற்காடு, திருவிற்கோலம், இலம்பையம், கோட்டூர், திருவூரல் தக்கோலம் திருவாலங்காடு, திருவெண்பாக்கம், திருப்பாச்சூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர் ஆகிய 11 புகழ் பெற்ற சிவாலயங்கள் உள்ளன. 

இந்த பதினோரு சிவாலயங்களுக்கு மத்தியில் நடு நாயகமாக பாடி திருவல்லீஸ்வரர் கோவில் அமைந்து இருக்கிறது. அதாவது சுற்றிலும் மற்ற சிவாலயங்கள் மாலையிட்டது போல இயற்கையாகவே அமைந்திருக்கும் நிலையில், இத்தலம் மத்தியில் அமைந்துள்ளது. இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழமையான ஆலயம். 

ஆனால் சிறப்பான திருப்பணிகள் காரணமாக இந்த கோவில் புத்தம் புதிது போல `பளிச்'சென காணப்படுகிறது. தேவார காலத்தில் திருவலிதாயம் சிந்தாமணிபுரம் என்று இத்தலம் அழைக்கப்பட்டது. தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32-ல் இத்தலம் 21-வது இடமாக உள்ளது. பல புராண நிகழ்வுகள் இத்தலத்துடன் தொடர் புடையவைகளாக இருக்கின்றன.


திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலம் ராமபிரான், ஆஞ்ச நேயர், சூரியன், சந்திரன், இந்திரன், பரத்வாஜர், வியாழபகவான் உள்பட பலர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகவும், சாப விமோசனம் பெற்ற தலமாகவும் உள்ளது. 

ஏராளமான ரிஷிகளும், மகான்களும் இத்தலத்து ஈசனை பூஜித்து பெரும் பேறு பெற்றுள்ளனர். குருபகவான் தனக்கு ஏற்பட்ட சாபத்தை முழுமையாக நிவர்த்தி செய்து கொண்டது இந்த தலத்தில்தான்.


பிரம்மாவின் மகள்களான கமலி, வல்லி இருவரும் இத்தலத்து இறைவனை பூஜித்து விநாயகரை இறைவன் உத்தரவுப்படி திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள விநாயகர் திருமண கோலத்தில் உள்ளார். 

விநாயகரின் திருமணம் இத்தலத்தில் நடைபெற்றதாக சொல்கிறார்கள். எனவே திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து, வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோவிலை வலம் வந்தால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. 


இந்த கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. கோவிலில் 3 நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் எழில் மிகுந்த கொடி மரத்தை காணலாம். இதையடுத்து பலி பீடமும் நந்திஸ்வரரும் உள்ளனர். 

பிரதோஷ நாட்களில் இந்த நந்தி பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகள் கண் கொள்ளாக் காட்சியாகும். சனி பிரதோஷ நாட்களில் இவரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வது அதிசயம். நலம் தரும் இந்த நந்தீஸ்வரரை வணங்கி, விடை பெற்று உள்ளே செல்ல வேண்டும். 

கருவறையில் மூலவர் திருவலிதாய நாதர் உள்ளார். இவர் சுயம்பு மூர்த்தி. இவரை வழிபட வரிசையில் நிற்கும் போதே தாயார் ஜெகதாம்பிகையும் நாம் வழிபட முடியும். அதற்கு ஏற்ப இத்தல அமைப்பு உள்ளது. பெரும்பாலான சிவாலயங்களில் இத்தகைய அமைப்பு பார்க்க முடியாது. 

தாயார் ஜெகதாம்பிகை நின்ற கோலத்தில் அருள்கிறார். கொள்ளை அழகுமிக்க அவளை ஆனந்தம் 
பொங்க வழிபட்டால் நிச்சயம் அவள் நம் குடும்பத்துக்கு ஐஸ்வர்யத்தை அள்ளித் தருவாள். முதலில் வழிபாடு செய்யப்பட்டு வந்த ஜெகதாம்பிகை சிலை சற்று சேதமாகி விடடது. இதனால் அதை கருவறைக்குள் வைத்து விட்டு, புதிய விக்கிரகம் அமைத்துள்ளனர். 

அம்பாளுக்குரிய சிம்மமும், பலி பீடமும் வெளிப்பிரகாரத்தில் உள்ளது. கருவறை கஜபிருஷ்ட அமைப்புடையது. அதில் விநாயகர், தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டீகேசுவரர், துர்க்கை உள்ளனர். மூலவரை வழிபட்ட பிறகு 
கருவறையை சுற்றிய உள்பிரகாரத்தில் வலம் வரலாம். உள் பிரகாரத்தில் கருவறை பின்புறம் 6 சன்னதிகள் உள்ளன. 

முதல்  
சன்னதியில் சோமாஸ்கந்தர் உள்ளார். அடுத்த விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், அனுமன் பூஜித்த லிங்கம், மீனாட்சி சுந்தரேசுவரர், பரத்வாஜர் வழிபட்ட லிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன. திருப்புகழில் இத்தலத்து முருகன் பாடல் உள்ளது. 

இதையடுத்து நாயன்மார்களில் சிலரும், நாகர்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை வணங்கியபடி வந்தால் அம்பாள் சன்னதி பின் பிறம் மூலையில் பைரவர் நின்று அருள்வதை காணலாம். அந்த பிரகாரத்தில் உள்ள தூண்களில் நடராஜர், கோதண்டராமர், மச்சவதார மூர்த்தி, 
கூர்மாவதார மூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

சிவனை வழிபட்டபடி ஆஞ்சநேயர் உள்ளார். அம்பாளுக்கு எதிரே உள்ள சன்னதியில்  
உயரே அஷ்டலட்சுமிகள் அமைக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் சூரியன், நால்வர், முருகர் சிலைகளை காணலாம். இங்கு திருவல்லீஸ்வரரை மனம் உருக வழிபட்டால் உடல் நலம் உண்டாகும். திருமணத் தடை உள்பட எல்லா தடைகளும் விலகும். 

முக்கிய விஷயங்களுக்கு செல்லும் முன்பு இவரை வழிபட நிச்சயம் வெற்றி உண்டாகும். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் இவரை வழிபட நற்பேறு கிடைக்கும். உள்பிரகாரத்தில் வழிபாடுகளை முடித்த பிறகு வெளி பிரகாரத்தை சுற்றி வரலாம். இந்த பிரகாரத்தில் சுற்றிலும் நந்தவனம் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது. 

நந்தவனத்து மலர்களை பார்த்துக் கொண்டே நடந்தால் கோசாலையை பார்க்
லாம். இதையடுத்து நவக்கிர சன்னதி உள்ளது. அந்த சன்னதி எதிரே சற்று தூரத்தில் உள்ள கிணறுதான் பரத்வாஜர் தீர்த்தமாக கருதப்படுகிறது. ஆதி காலத்தில் இத்தலத்தில் முக்தி தீர்த்தம் அனுமன் தீர்த்தம் உள்பட 5 பெரிய தீர்த்தங்கள் இருந்ததாம். 

கால ஓட்டத்தில் அவை மறைந்து விட தற்போது பரத்வாஜ் தீர்த்தம் மட்டும் மிஞ்சியுள்ளது. நவக்கிரக சன்னதிக்கும் கொடி மரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் குருபகவானுக்கு தனி சன்னதி எழுப்பியுள்ளனர். குரு மேற்கு பார்த்து உள்ளார். இது சமீபத்தில் கட்டப்பட்டதாகும். 


வியாழன் தோறும் இந்த குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் குரு சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும். பாவங்கள் நீங்கும். 9 வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட குரு அருள்கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சி இத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடக்கிறது. 

ஆலங்குடிக்கு அடுத்தப்படியாக இத்தலம்தான் குரு பகவானுக்குரிய பூஜைகளை செய்ய மிகவும் உகந்த தலமாக உள்ளது. இந்த ஆண்டு ஜுன் 13-ந்தேதி குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய 7 ராசிக்காரர்களும் குரு பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டும் என்று கணித்துள்ளனர். 

இதற்காக இத்தலத்தில் 12, 13, 14-ந்தேதிகளில் 3 நாட்கள் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை மற்றும் குரு பரிகார ஹோமத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிகார ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ராசிக்கு ஏற்ப பரிகார நிவர்த்தி செய்யப்பட உள்ளது. 


பாடி டி.வி.எஸ் பஸ் நிறுத்தத்தில் இறங்கி படவட்டம்மன் கோவில் எதிரில் செல்லும் தெரு வழியாக வந்தால் சீர்மிகு இத்தலத்தை மிக எளிதில் சென்றடையலாம். இத்தலத்தில் காலடி எடுத்து வைத்தாலே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

SSN  16 Oct 2014

No comments:

Post a Comment