Wednesday, October 15, 2014

வலை வாசம்: குடிப்பதற்குச் சில டாலர்கள்...


அமெரிக்கா பணக்கார நாடு, முதலாளித்துவ நாடு என்பதெல்லாம் நம் அனைவருக்கும் தெரியும். இங்குள்ளவருக்கு மூன்று கொள்கைகள் உண்டு.

(1) பணம், (2) பணம், (3) பணம். இங்கே உள்ள ஏற்றத்தாழ்வின் விளைவாக, கணிசமான பிச்சைக்காரர்களும் இங்கு உண்டு.

நியூயார்க் நகரின் சப்வே மற்றும் டிராஃபிக் சிக்னல்களில் பிச்சைக்காரர்கள் சிலரைப் பார்க்கலாம். மாற்றுத்திறனாளிகள் முதல் இசைக் கலைஞர்கள் வரை பிச்சைக்காரர்களில் பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் முன்னாள் ராணுவத்தினர் என்று சொல்வதை நம்புவதா இல்லையா என்று தெரியாது. காலையில் ஆரம்பித்து மாலைக்குள் சில சமயங்களில் நூறு டாலருக்கு மேல் சம்பாதித்துவிடுவார்கள் இந்தப் பிச்சைக்காரர்கள்.

பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பிச்சை எடுக்கும் இளைஞர்களையும் பார்க்க முடியும். நான்கைந்து பேர் வந்து, டேப்ரிக்கார்டரைப் போட்டுவிட்டு, பிரேக் டான்ஸ் அல்லது சில சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிப்பார்கள். சப்வேயின் குறுகிய இடத்தில் அவர்கள் வெகு வேகமாக சர்க்கஸ் வேலை செய்யும்போது நம்மேல் விழுந்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கும்.

தனியாகவோ அல்லது குழுவாகவோ வந்து பாட்டுப் பாடி பிச்சை எடுப்பவர்கள் அதிகம். தனிமையாக வந்து சிலர் பாடுவது சகிக்காது. காசு கொடுத்து அவர்களை விரைவாக நகர்த்த வேண்டிவரும். சில இசை வாத்தியக்காரர்களின் திறமை ஆச்சரியமூட்டும். குறிப்பாக, ஹாலோ கிடாரில் ஒரு வெள்ளைக்காரன் விரல்களால் பிளக்கிங் பண்ணுவது மிக அருமையாக இருக்கும். ஒரு கொரிய சிறுவன், கேசியோ கீபோர்டில் அநாயசமாக வாசிப்பான். ஒரு ஆப்பிரிக்க இன இளைஞன் டிரம்ஸில் தனி ஆவர்த்தனம் வாசிப்பான்.

மிரட்டிய இந்திய முகம்

ஒரு நாள் மாலை அலுவலகம் முடிந்து, பேருந்துக்காக சட்பின் புல்வர்டில் காத்திருந்தபோது, இந்திய சாயல் கொண்ட பிச்சைக்காரன் ஒருவன் அருகில் வந்து “மலையாளியோ?” என்றான். கண்கள் சிவந்திருந்தது. “இல்லை” என்றேன். அவன் விடவில்லை, “பின்ன எந்த ஊர்” என்றான். சென்னை என்றதும், “ஓ தமிழா? எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்லி “அவசரமாக ஒரு பத்து டாலர் வேண்டும்” என்றான். 

வாலட்டை எடுத்து ஒரு டாலர் தரலாம் என்று பார்த்தால் 20 டாலர் நோட்டுகள் மட்டும் இருந்தன. குடித்து அழிபவனுக்கு 20 டாலர் கொடுக்க மனம் வரவில்லை என்பதால், சில்லறை இல்லை என்றேன்.

முறைத்துப் பார்த்த அவன் “வாலட்டை என்னிடம் காட்டு” என்றான். என்னுடைய எல்லா எச்சரிக்கை செல்களும் விழித்துக்கொள்ள உடல் பதறி, மறைத்தேன். அதற்குள் பஸ் வந்துவிட விரைந்து ஏறினேன். அவனும் பின்னால் ஏறி, கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான். 

எனக்கு அவமானமாகவும் ஆத்திரமாகவும் இருந்தது. என்னைக் கொன்றுவிடுவதாக வேறு சவால் விட்டுக்கொண்டிருந்தான். சக பயணிகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அடுத்த நிறுத்தத்தில் சட்டென்று இறங்கி ஒரு கடையில் சென்று மறைந்தேன். அவனும் இறங்கி என்னைத் தேடிக் காணாமல் திரும்பிப் போய்விட்டான். 

அதன் பின், சட்பின் புல்வர்டு அருகில் முழு போதையுடன் அவன் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். வேறு பாதையில் மறைந்து சென்றுவிடுவேன்.

சில நாட்களுக்கு முன் இரவு சப்வேயை விட்டு வெளிவரும்போது அதே இடத்தில் நியூயார்க் நகர போலீஸ் கார் அருகில் நிற்க, ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்த உடலைப் பார்த்துத் திடுக்கிட்டேன். 

என்னை மிரட்டிய நபர்தான் அது. அந்த மனிதனின் முடிவை எண்ணி ஒரு நிமிடம் கலங்கி நின்றேன்.

ஆல்ஃபிரட் தியாகராஜன் தி இந்து:அக்டோபர் 15, 2014

இன்னும் விரிவான வாசிப்புக்கு - http://paradesiatnewyork.blogspot.com/

No comments:

Post a Comment