லஞ்சம் வாங்குவதில் பத்திரப் பதிவு, மின்வாரியம், போலீஸ், ஆர்டிஓ அதிகாரிகள் முன்னிலை யில் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
லஞ்சம் அதிகம் வாங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. மாநில அளவில் தமிழகம் 17-வது இடத்தில் உள்ளது. லஞ்சம் வாங்குபவர்களை பிடிப்பதற்காக தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் உள்ளது.
இந்த துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிக லஞ்சம் வாங்கப்படும் இடங்களில் பத்திரப்பதிவு துறை முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து தினமும் குறைந்தது 100 புகார்கள் வருகின்றன. ஆனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பத்திரப்பதிவு அலுவலகத்தில் மட்டும் எளிதாக பிடிக்க முடிவதில்லை. பத்திரம் எழுதும் எழுத்தர்கள் மூலம் மிக கவனமாக லஞ்சப்பணத்தை கைமாற்றுகிறார்கள்.
அடுத்த இடத்தில் மின்வாரியம் உள்ளது. வீட்டிற்கு இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பதில் தொடங்கி அனைத்துக்கும் லஞ்சம் கட்டாயம் கொடுக்க வேண்டியி ருக்கிறது. அடுத்தபடியாக ஆர்டிஓ அலுவலகங்கள், போலீஸ் துறை, தாலுகா அலுவலகங்கள் போன்ற இடங்களில் அதிக லஞ்சம் வாங்கப்படுகிறது.
லஞ்சம் அதிகம் கொடுப்பவர் களில் வியாபாரிகள் முதலிடத் தில் உள்ளனர். ஒரு வியாபா ரத்தை தொடங்க மாநகராட்சி, தொழிலாளர் நலத்துறை, வரு மான வரி என பல இடங்களில் உரிமை வாங்க வேண்டும்.
அவர்கள் அத்தனை இடங்களி லும் லஞ்சம் கொடுத்துதான் காரியத்தை முடிக்கின்றனர். பல இடங்களில் உரிமம் வாங்குதல், பன்முக வரி செலுத்துதல் போன்றவற்றை ஆண்டு தோறும் ஒரு வியாபாரி செய்ய வேண்டி இருப்பதால் அவர்கள் அதிகமான லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பிரச்னை இல்லாமல் தொழில் செய்ய நினைப்பதால் பெரும்பாலும் அவர்கள் புகார் கொடுப்பதில்லை.
ஆனால் இரு நாட்களுக்கு முன்பு ஒரு பருப்பு வியாபாரி துணிச்சலாக புகார் கொடுத்ததால் தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவரை கைது செய்தோம்
சென்னை வடபழனியில் பருப்பு மொத்த வியாபார கடை நடத்தி வரும் குமார் என்பவரின் கடைக்கு அனுமதி வழங்க தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆய்வாளர் ரமேஷ் (55) என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்து சிறையில் அடைத்தோம். குமார் கொடுத்த தகவலால் இதை செய்ய முடிந்தது.
பருப்பு வியாபாரி குமாருக்கு இருந்த துணிச்சல் மற்ற வியாபாரிக்கும் இருந்தால் பல லஞ்ச அதிகாரிகள் சிக்குவார்கள்.
உங்களிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 044-24615989, 24615949, 24615929 ஆகிய எண்களில் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி கூறினார்.
தி இந்து:திங்கள், நவம்பர் 10, 2014
No comments:
Post a Comment