பிரபல கர்னாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் கலையுலகினர், திரையுலகினர் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் (45) நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா, கடம் கலைஞர் விக்கு விநாயக் ராம், வீணை காயத்ரி உள்ளிட்ட இசை பிரபலங்கள், திரைத்துறையினர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடலுக்கு நேற்று காலை அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பிற்பகல் 2.15 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் திரைத்துறை, இசைத்துறையினர் ஏராள மானோர் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி அளவில் ஊர்வலம் பெசன்ட் நகர் மயானத்தை அடைந்தது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. மாண்டலின் ஸ்ரீநிவாஸின் பெற்றோர் சத்யநாராயணா - காந்தம்மாள் மற்றும் அவரது தம்பி மாண்டலின் ராஜேஷ் ஆகியோர் இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் தகன மேடைக்கு உடல் கொண்டு சென்று எரியூட்டப்பட்டது.

டிரம்ஸ் வாசித்து அஞ்சலி:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது ‘டிரம்ஸ்’ சிவமணி, டிரம்ஸ் வாசித்து சோகத்துடன் இசை அஞ்சலி செலுத்தினார்.

டிரம்ஸ் சிவமணி:

ராணுவ வீரர்கள், மாபெரும் தலைவர்கள் மறைவின்போது, டிரம்ஸ் ஒலிக்கப்பட்டு இறுதி மரியாதை அளிக்கப்படும். அதே பாணியில் டிரம்ஸ் ஒலித்து, இசை உலகின் அன்புக்குரிய மாண்டலின் ஸ்ரீநிவாஸை கடைசியாக வழியனுப்பி வைத்தேன். அவர் 9 வயது சிறுவனாக இருப்பதில் இருந்தே எனக்கு தெரியும். இசை உலகில் அவர் அடைந்த அபார வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்தவன் நான். அவரது மறைவு, இசைத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு. இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்:

சிறு வயது முதல் அவருடன் இருந்து வளர்ந்தவன் நான். மாண்டலின் ஸ்ரீநிவாஸிடம் இசையை மட்டுமல்லாது, புகழின் உச்சிக்கு சென்றாலும் எளிமையை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

திரைப்பட இயக்குநர் பரத் பாலா:
கர்னாடக இசையையும், நமது கலாச்சாரப் பெருமையையும் உலக அரங்குக்கு கொண்டுசென்றவர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ்.